சென்னை: தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கும் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் புறநகர் ரயில் சேவை இயக்கப்படும் என, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் கோரிக்கையின் அடிப்படையில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், “சென்னை புறநகர் ரயில்களில் பயணிப்பவர்களுக்கு அத்தியாவசியப் பணியாளர்கள் என சான்று அளிப்பதற்காக தமிழ்நாடு அரசு சிறப்பு அலுவலரை நியமித்துள்ளது.
அத்தியாவசியப் பணியாளர்கள் என சிறப்பு அலுவலரால் சான்று அளிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய முடியும். பொது மக்கள் பயணம் செய்ய முடியாது. ரயிலில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்களின் பெயர், பதவி, அலுவலகத்தின் விவரங்கள் அதில் குறிப்பிடப்படும். அத்தியாவசியப் பணியாளர்கள் ரயிலில் பயணம் செய்யும்போது, ஒப்புதல் சான்றிதழுடன் அடையாள அட்டையைக் கொண்டு செல்ல வேண்டும்.
மேலும், ரயிலில் பயணிக்கும்போது ரயில்வே பாதுகாப்பு படையினராலும், டிக்கெட் பரிசோதகர்களாலும் சோதனை நடத்தப்படும். பயணிகள் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைபிடிப்பது போன்றவற்றை முறையாகப் பின்பற்ற வேண்டும். இணையத்தில் வெளியாகும் அறிவிப்புகளை கவனித்து அதற்கேற்ப செயல்பட வேண்டும். அவ்வப்போது கிருமி நாசினிகள் மூலம் ரயில் பெட்டிகள் தூய்மைப்படுத்தப்படும்.
ஒரு ரயில் நிலையத்தில் 2 முன்பதிவு மையங்கள் இருந்தால் ஒன்று சாதாரண டிக்கெட்களுக்கும், மற்றொன்று மாதாந்திரப் பயண அட்டை வழங்குவதற்கும் ஒதுக்கப்படும். அதே சமயம், ஒரு முன்பதிவு நிலையம் மட்டுமே இருந்தால், அங்குப் பயணிகள் அதிகம் வரும் நேரத்தில் சாதாரண டிக்கெட்டுகளும் மற்ற நேரத்தில் மாதாந்திர பயண அட்டைகளும் வழங்கப்படும். ஏற்கனவே இருக்கும் மாதந்திர பயண அட்டை, ஊரடங்கு காலத்திற்கு ஏற்ப நீட்டிக்கப்படும்” என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.