கரோனா தொற்று இரண்டாம் அலை இந்தியா முழுவதும் வேகமாக பரவிவருவருகிறது. இதையடுத்து மேற்கு வங்க அரசு, வெளிமாநிலங்களில் இருந்து தங்கள் மாநிலத்திற்கு வரும் விமான பயணிகள் அனைவரும், கரோனா நெகட்டிவ் சான்றிதழ்களுடன் தான் வரவேண்டும். அது இல்லாத பயணிகளை மாநிலத்திற்குள் அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளது.
கொல்கொத்தாவிற்கு தினமும் 9 விமானங்கள் சென்னையிலிருந்து சென்றன. அதேபோல் அங்கிருந்து தினமும் 9 விமானங்கள் சென்னை வந்து கொண்டிருந்தன. அந்த 18 விமானங்களும் இன்றிலிருந்து மறு அறிவிப்பு வரும்வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், சென்னையிலிருந்து மேற்கு வங்க மாநிலத்திலுள்ள சிலிகுரிக்கு செல்லும் 2 விமானங்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் கொல்கத்தா விமானங்கள் 18 உட்பட இன்று மொத்தம் 96 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று (மே 6) சென்னையிலிருந்து புறப்பாடு விமானங்கள் 48, வருகை விமானங்கள் 52 என மொத்தம் 100 உள்நாட்டு விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. வருகை விமானத்தில் 2 ஆயிரத்து 100 பயணிகளும், புறப்பாடு விமானத்தில் 2 ஆயிரத்து 800 பயணிகள் என மொத்தம் 4 ஆயிரத்து 900 பயணிகள் பயணிக்கின்றனர்.