கரோனா பரவல் காரணமாக சென்னை - மேற்கு வங்க மாநிலத்திற்கு பயணிகள் விமான சேவை கடந்த ஜுலை 6 ஆம் தேதி நிறுத்தப்பட்டது. நாள்தோறும் காலையில் சென்னை - கொல்கத்தா மற்றும் சிலிகுரி செல்லும் விமானங்கள் உள்பட 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
கரோனா பரவல் நீடித்து வந்த நிலையில், 15 நாள்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட சேவை தொடர்ச்சியாக தடை செய்யப்பட்டது. இந்நிலையில், மேற்கு வங்க அரசு விதித்திருந்த தடை நீடிக்கப்பட்டதால் மேற்கு வங்கத்தில் மீண்டும் பயணிகள் விமான சேவை இன்று தொடங்கியது. எனவே, 57 நாள்கள் கழித்து சென்னை - கொல்கத்தா விமான சேவை தொடங்கியதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இன்று காலை 7.35 மணிக்கு சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு முதல் விமானம் 222 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. அதேபோன்று மாலை 4.15, 6.10, 6.20 இரவு 10.05 மணி என மொத்தம் 5 விமான சேவைகள் சென்னை- கொல்கத்தா இடையே இயக்கப்படுகின்றன. சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் வழக்கமாக வருகை விமானங்கள் 38, புறப்பாடு விமானங்கள் 38 என்று 76 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.
ஆனால், இன்று புறப்பாடு 43 விமானங்கள், வருகை 44 விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து புறப்படும் விமானங்களில் சுமாா் 4 ஆயிரத்து 200 பயணிகளும், சென்னைக்கு வரும் விமானங்களில் 5 ஆயிரம் பயணிகளும் மொத்தம் 9 ஆயிரத்து 200 போ் பயணிக்கின்றனா். வழக்கமாக சுமாா் 6 ஆயிரம் பேர் பயணிப்பார்கள்.
ஊரடங்கு தளா்வு, இ பாஸ் ரத்து, கொல்கத்தா விமான சேவை தொடக்கம் காரணமாக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: பிரணாப் மறைவிற்கு அதிமுக இரங்கல்!