சென்னை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சாலையைச் சேர்ந்த 23 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் சென்னை தெற்கு மண்டல சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தான் போரூரில் தங்கி ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், தனது புகைப்படத்தை வைத்து முகநூலில் போலியான ஐடி (Fake ID) உருவாக்கி சிலர் மோசடி செயலில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மோசடி சம்பவம் தொடர்பாக தெற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகநூல் ஐடி (Facebool ID) உருவாக்குவதற்குப் பயன்படுத்திய ஈமெயில் ஐடி (email ID) மற்றும் செல்போன் எண்களை வைத்து திருவொற்றியூரை சேர்ந்த ஐடி ஊழியரான தமிழ்மாறன்(23) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட தமிழ்மாறன், புகாரளித்த இளம்பெண்ணின் நண்பர் என்பதும், அதே ஐடி கம்பெனியில் பணியாற்றி வருவதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தமிழ்மாறனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
தனது ஐடி கம்பெனியில் பணியாற்றிய இளம்பெண்களைத் தெரியாமல் புகைப்படம் எடுத்து, அதை டிபியாக வைத்து போலி முகநூல் பக்கத்தை உருவாக்கியதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அந்த ஐடியில் இருந்து பல ஆண் நண்பர்களுடன் நட்பாகி, பெண் போல தமிழ்மாறன் ஆபாசமாகப் பேசி வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் புகாரளித்த அந்த பெண்ணுக்கு தெரியாமலே தமிழ்மாறன் தினமும் புகைப்படம் எடுத்து முகநூலில் ஆபாசமாகச் சித்தரித்துப் பதிவிட்டு, பிறரிடம் ஆபாசமாகப் பேசியதும், இணையதளங்களில் உள்ள ஆபாசமான புகைப்படங்களைப் பதிவிறக்கம் செய்து அதை அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒரு கட்டத்தில் தமிழ்மாறன் பெண் போல பேசும் போது, எதிர்தரப்பில் இருக்கும் நபர் ஆண் போல குரல் இருப்பதை அறிந்ததால், தொண்டை சரியில்லை எனக்கூறி, பின்னர் அவர்களை நம்பவைக்க இவர் எடுத்த பெண்ணிகளின் புகைப்படத்தை தமிழ்மாறன் அனுப்பி வைத்துள்ளார்.
இந்த நிலையில் ஒருவரிடம் முகநூலில் ஆபாசமாக பேசுவதை தமிழ்மாறன் தவிர்த்து கொள்ள அவரை பிளாக் செய்துள்ளார். ஆனால் அந்த நபர் இன்ஸ்டாகிராமில் அதே பெண்ணின் ஐடியை தேடி, உண்மையான அந்த பெண்ணின் ஐடியை கண்டுபிடித்துள்ளார். அந்த பெண்ணிடம், ஏன் தன்னிடம் ஆபாசமாக பேசுவதை தவிர்கிறார் என கேட்டப்போது, அந்த நபரிடம் பேசியது ஃபேக் ஐடி என்பது குறித்த தகவலை அறிந்துள்ளார்.
பின்னர் ஃபேக் ஐடியில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்களை வைத்து, தனது கம்பெனியில் பணியாற்றிய தனது நண்பர் தமிழ்மாறன் புகைப்படம் எடுத்ததை அந்த இளம்பெண் கண்டுபிடித்து, காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.
'லவ் டுடே' படத்தில் வருவது போல நண்பர்களை கலாய்ப்பதற்காக பெண் போல ஃபேக் ஐடி உருவாக்கி ஆபாசமாக பேசியதாகவும், அதன் பிறகு தற்போது ஆபாசமாக சேட் செய்யவில்லை என்றால் இரவில் தூக்கம் வருவதில்லை எனவும் தமிழ்மாறன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சைபர் கிரைம் போலீசார் தமிழ்மாறனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: காதலுக்காக பெண்ணாக மாறிய ஆண்! திருநங்கையர்கள் தலைமையில் திண்டுக்கல்லில் நடந்த திருமணம்!