சென்னை: இந்தியாவில் உள்ள மெட்ரோ நகரங்களில் "பெண்களுக்குப் பாதுகாப்பு நிறைந்த நகரம்" பட்டியலில் சென்னை நகரம் இருப்பதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022ம் ஆண்டு தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
2022ஆம் ஆண்டு தரவுகள் படி மெட்ரோ நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூர், புனே, கொல்கத்தா, சென்னை என ஒப்பிடுகையில், சென்னை நகரில், பெண்களுக்கு எதிராக 736 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது மற்ற நகரங்களில் விட குறைவானது.
மேலும், டெல்லி, மும்பை, பெங்களூர், புனே, கொல்கத்தா ஆகிய மெட்ரோ நகரங்களில் அதிகபட்சமாக டெல்லியில், கடந்தாண்டு பெண்களுக்கு எதிராக 14 ஆயிரத்து 158 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மும்பையில் 6 ஆயிரத்து 176 வழக்குகளும், பெங்களூருவில் 3 ஆயிரத்து 924 வழக்குகளும் பெண்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
சென்னையில் அதிக அளவில் பெண் காவலர்கள் பணியில் இருப்பது, ரோந்து பணி அதிகரிப்பு, சி.சி.டி.வி கேமரா உள்ளிட்டவற்றால் மகளிருக்கு எதிரான குற்றங்கள் பெரும் அளவு குறைந்துள்ளது. சென்னை நகரில் 1750 இடங்களில், 5250 கேமாரக்கள் மூலம் கண்காணித்து வரப்படுகிறது.
அதேபோல், பிங்க் பேட்ரோல் வண்டிகள் தொடர்ந்து முக்கிய இடங்களான பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் என முக்கிய இடங்களிலும் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதுவே, சென்னையில் பெண்களுக்கு எதிராகக் குற்றங்களைக் குறைக்கின்றன.
இதைத் தொடர்ந்து, சைபர் தடயவியல் சார்பில், தொடர்ந்து பெண்களின் பாதுகாப்புக்காக, சமூக வலைத்தளங்கள், உள்ளிட்ட இணைய வழி குற்றங்களைத் தொடர்ந்து தமிழக காவல் துறை செய்து வருகிறது.தமிழக காவல் துறை சார்பில், ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறையில், தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களை வைத்துத் தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யப்பட்டு வருகிறது.
கேமராக்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களை வைத்து, பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களான, சங்கிலி பறிப்பு, பாலியல் சீண்டல்கள், உள்ளிட்டவை உடனடியாக இந்த நவீன கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்படுகின்றன என சென்னை மாநகராட்சி ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஒரு மாதத்திற்கு முன் தனியார் நிறுவனத்தின் மூலம் உலகின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பற்றி ஆய்வு மேற்கொண்டதில் பாதுகாப்பான மாநகரங்களின் பட்டியலில் இந்திய அளவில் சென்னை முதலிடத்தையும், உலகளவில் 127வது இடத்தையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தொப்பூர் கணவாய் சாலை விபத்துகளை தடுக்க தீர்வு.. ரூ.775 கோடியில் அமைகிறது 'மேம்பால சாலை' - தருமபுரி எம்.பி. செந்தில்குமார் தகவல்!