சென்னையில் தற்போதுதான் கரோனா வைரஸ் தொற்று குறைந்துவருகிறது. அதற்குள் மழைக்காலம் தொடங்கிவிட்டது. 2015ஆம் ஆண்டு வந்த வெள்ளபெருக்கை அடுத்து மாநகராட்சி மழைநீரை சேமிக்கவும் அதைச் சரியான முறையில் கையாண்டு நிலத்தடி நீர் உடன் இணைப்பதற்கும், சாலையில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்கும் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 210 ஏரி, குளங்கள் உள்ளன. அதில் 133 தூர்வாரப்பட்டு தயார்நிலையில் உள்ளன. இதில் 50 தூர்வாரப்பட்டுவருகின்றன. மீதமுள்ள 27 இடங்களில் உள்ள ஏரி, குளங்களுக்குத் திட்டமிடல் போடப்பட்டு உள்ளது. விரைவில் அந்தப் பணிகளும் முடிந்துவிடும் என்று மாநகராட்சி அலுவலர்கள் கூறுகின்றனர்.
மேலும், மழைக்காலங்களில் மழைநீரைச் சரியான முறையில் பராமரிக்க உதவுது மழைநீர் வடிகால். 2016ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை மாநகராட்சியில் நான்காயிரத்து 34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி சென்னையில் முக்கியமாக இருக்கும் ஆறுகள் மூன்று. இதில் வடசென்னையில் கொசஸ்தலை ஆறு, மத்திய சென்னையில் அடையாறு, தென்சென்னையில் கோவளம் இந்த ஆறுகளிலும் 2,058 கிலோமீட்டருக்கு மழைநீர் வடிகால் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டுள்ளது.
இதை மாநகராட்சி பல்வேறு விதமாக பிரித்து அதைப் பராமரிப்பு நடைபெற்றுவருகிறது. அதில் சென்னை மெகா நகர மேம்பாட்டுப் பணி சார்பாக 390 இடங்களின் 125.27 கிலோமீட்டருக்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் சிட்டி சார்பாக 141 இடங்களில் 48.28 கிலோமீட்டருக்குப் பணிகள் முடிந்துள்ளன.
இது மட்டுமில்லாமல் மாநகராட்சி நேரடியாக மற்றும் டெண்டர் மூலமாகப் பணிகளைச் செய்துவருகிறது. முக்கியமாக மத்திய சென்னையில் இருக்கு அடையாறு பணிகளை 406 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூபாய் 1387.27 கோடி தமிழ்நாடு நீடித்த நிலையான நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின்கீழ் உலக வங்கி நீதியுடன் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.
மத்திய சென்னையில் தற்போது எவ்வளவு மழை பொழிந்தாலும் இந்த வடிகால் மூலம் அடையாறில் வரும் மழைநீர் கடலுக்குச் சென்றுவிடும் என மாநகராட்சி அலுவலர்கள் கூறுகின்றனர். அடுத்து வடசென்னையில் கொசஸ்தலை ஆறு பணிகள் 2.30 மாதத்திற்குள் அனைத்துப் பராமரிப்பு பணிகளும் முடிந்துவிடும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதைப் பற்றி மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், "கூவம், அடையாறு இரண்டு வடிநில கோட்டம் உலக வங்கி உதவியுடன் அனைத்துப் பராமரிப்பு பணிகளை 99 விழுக்காடு முடித்துவிட்டது.
தற்போது அந்தக் கூவம், அடையாறு இருக்கும் பகுதிகளில் மழைநீர் பெருக்கு, சாலையில் நீர் தேங்குவது போன்ற எந்தப் பிரச்னையும் இல்லை. அந்தப் பராமரிப்பை பாராட்டி ஆசிய வளர்ச்சி வங்கி வடசென்னையில் உள்ள கொசஸ்தலை ஆறு வடிநில கோட்டத்திற்கு 2,250 கோடி ரூபாய் நிதி அளித்து, அது தமிழ்நாடு அரசு மூலம் டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்னும் 2.30 மாதங்களில் அனைத்துப் பணிகளும் முடிந்துவிடும். அதற்கு பிறகு வடசென்னை பகுதிகளும் வெள்ள அபாயத்தில் இருக்காது.
அதேபோல் தென் சென்னை பகுதிகளில் கோவளம் வடிநில கோட்டத்தின்கீழ் வரும், இதற்கு ஜெர்மன் வளர்ச்சி நிதியின்கீழ் மழைநீர் வடிகால் அமைப்பதற்கு இரண்டு ஆண்டுகளாக வடிவமைத்து m1,m2, m3 என்று மூன்றாகப் பிரித்து தற்போது பணிகள் நடைபெற்றுவருகின்றன.
அனைத்து ஆண்டுகளிலும் 2015 போல் வெள்ள அபாயம் வராது. எப்போதாவதுதான் அதுபோல் வரும் அதுபோல் வந்தால் வடிகால் வடிவமைப்பைப் பொருத்தே நீர் செல்லும் தற்போது அதுபோன்று பெரிய அளவில் மழை பொழிந்தாலும் தற்போது அமைக்கப்படும் வடிகால் மூலம் வங்காள விரிகுடாவுக்குச் சென்றுவிடும்" எனத் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி மழை தண்ணீரை குட்டை, குளத்தில் சேகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. நிலத்தடி நீரைப் பெருக்குவதற்காக ஜெர்மன் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வடிகட்டும் முறையை பயன்படுத்தப்போவதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், "சாதாரணமாக ஆகும் செலவில் 30 விழுக்காடு குறைவாகவே இதற்குச் செலவாகும். மேலும் கோவளம் மற்றும் எங்கெங்கு பயன்படுத்த முடியுமோ அனைத்து இடங்களிலும் பயன்படுத்துவோம்.
நிலத்தடி நீரை செயற்கையாக எப்படியெல்லாம் அதிகரிக்க முடியுமோ அனைத்து வகைகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது" என்றார்.
இதையும் படிங்க...அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!