சென்னை: சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. கடந்த மார்ச் மாதம் பிடெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்த ஆந்திர மாணவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். கடந்த மார்ச் 31ஆம் தேதி, சென்னை ஐஐடியில் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த, மேற்கு வங்கத்தை சேர்ந்த மாணவர் சச்சின்குமார் ஜெயின்(31), வேளச்சேரியில் அவர் தங்கியிருந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று(ஏப்.13) அதிகாலை 3 மணியளவில் சென்னை ஐஐடியில் பயிலும் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள், மாணவர் சச்சின்குமார் தற்கொலைக்கு நீதி கேட்டு, ஐஐடியின் பிரதான நுழைவு வாயில் அருகே திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, ஆராய்ச்சி மாணவர் சச்சின்குமார் தற்கொலைக்கு காரணமான ஐஐடி பேராசியர் கே.வி.ஷென் மீது நடவடிக்கை எடுக்காமல், டீன் வர்ஷா அவரை காப்பாற்றுவதற்காக தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர். மாணவர் சச்சின் தற்கொலைக்கு காரணமான பேராசிரியர் ஷென் மற்றும் அவரை காப்பாற்ற முயலும் டீன் வர்ஷா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து போலீசார் மற்றும் ஐஐடி இயக்குனர் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, சம்மந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். அதன் பிறகு மாணவர்கள் கலைந்து சென்றனர். அதிகாலையில் சுமார் 2 மணி நேரம் போராட்டம் நடைபெற்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஐஐடி வாளாகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் ஆந்திர மாணவர் தற்கொலை - தொடரும் தற்கொலைகள் குறித்து போலீஸ் விசாரணை!