சென்னை ஐஐடி கல்லூரியில் பயின்று வந்த கேரள மாணவி ஃபாத்திமா லத்தீஃப் (18), நவ.8ஆம் தேதி தனது விடுதியறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக மாணவி ஃபாத்திமா லத்தீஃப், "தனது சாவுக்குக் காரணம் ஐஐடி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன், ஹேமச்சந்திரன் காரா, மிலின் பிராஃமே ஆகியோர் தான்" என்று இறப்பதற்கு முன்னதாக செல்ஃபோனில் குறிப்பிட்டுள்ளதாக அவரது தந்தை குறிப்பிட்டுள்ளார்.
அதனடிப்படையில் மாணவியின் தற்கொலைக்கு காரணமாக கருதப்படும் சுதர்சன் பத்மநாபன், ஹேமச்சந்திரன் காரா, மிலின் பிராஃமே ஆகிய மூன்று பேரிடமும் விசாரணை நடத்தவுள்ளதாக கோட்டூர்புரம் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாணவி இறந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு கேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த ஐஐடி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டம் நடத்தப்பட்ட இடத்தில் பாதுகாப்பை தீவிரப்படுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களிடம் காவல்துறை சமரச பேச்சுவாரத்தை நடத்தினர். அதில் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து மாணவர்கள் அப்பகுதியை விட்டு கலைந்து சென்றனர்.
இது குறித்து கேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில பொதுச்செயலாளர் அசோக் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மாணவி ஃபாத்திமா தற்கொலைக்கு தூண்டப்பட்டுள்ளார் என்பது எங்களது புகார். இங்கு பணிபுரியும் பத்மநாபன் உட்பட 3 பேராசிரியர்கள் மீது ஃபாத்திமா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது மொபைலில் நோட்ஸ் எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார்.
எனவே, இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது உடனடியாக பணியிட நீக்கம் செய்ய வேண்டும். தற்போது நடைபெற்று வரும் விசாரணையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. உடனடியாக விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்" எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், "குறிப்பாக மதம் சார்ந்து இந்த பெண் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதை அனைத்தையும் சிபிஐ விசாரணை செய்து வெளி கொண்டுவர வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க: கோவை இளம்பெண் விபத்து: அவசர வழக்காக விசாரிக்க டிராஃபிக் ராமசாமி மனு!