சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அவரது சமாதியில் நினைவு மண்டபம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. அதன்படி, நினைவு மண்டபம் கட்டுவதற்காக 50.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் 2018ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இந்த நினைவு மண்டபத்தில், அமைக்கப்படும் பீனிக்ஸ் பறவைக்கான ராட்சத சிறகு மற்றும் அதனைத் தாங்கி நிற்கும் கருவிகள் துபாயிலிருந்து கப்பலில் கொண்டுவரப்பட்டு பணிகள் இரவு, பகலாக நடைபெற்றுவந்த நிலையில், தற்போது கட்டுமான பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. இந்நிலையில், அதற்கான உறுதிச்சான்றிதழை சென்னை ஐஐடி வழங்கியுள்ளது.
இது குறித்துப் பேசிய பொதுப்பணித் துறை அலுவலர்கள், "ஜெயலலிதா நினைவு மண்டபம், அதனைச் சார்ந்த கட்டமைப்புகள் சுமார் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது. பீனிக்ஸ் பறவை, அதற்கான சிறகு அமைக்கப்படுவது சவாலான பணி என்பதால் துபாயிலிருந்து கட்டடக்கலை வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் கொடுத்துள்ள ஆலோசனைப்படி பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகின்றன.
இவர்களுடன், சென்னை ஐஐடி கட்டடக் கலை வல்லுநர்கள் வழிகாட்டுதல்படி நினைவிடத்தில் ராட்சத பீனிக்ஸ் பறவை வடிவிலான கட்டுமானம் அமைக்கப்படவுள்ளது. இதனை ஐஐடி கட்டடக்கலை வல்லுநர்கள் ஆய்வுசெய்து உறுதியான தன்மைக்கான சான்றிதழை வழங்கியுள்ளனர்.
தற்போது, நினைவிடப் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. மேலும், அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லால் ஆன நடைபாதை வசதி, புல்வெளி, நீர்த்தடாகங்கள், சுற்றுச்சுவர், புல்வெளி நடைபாதைகள், அழகுபடுத்தும் பணிகள் நடந்துவருகின்றன. இந்தப் பணிகள் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் நிறைவடைந்துவிடும்.
அடுத்த மாதம் இறுதியில் முழமையாகப் பணிகள் முடிக்கப்பட்டு தமிழ்நாடு அரசிடம் முறையாக ஒப்படைக்கப்படும், நினைவு மண்டபம் திறப்புவிழா எப்போது என்பது குறித்து தமிழ்நாடு அரசு முடிவு செய்து அறிவிக்கும்" என்றனர்.
இதையும் படிங்க: வேதா இல்லம் ஜெயலலிதா நினைவிடமாக மாற்றப்படும் - பொள்ளாச்சி ஜெயராமன்