சென்னை: ரயில்கள் மோதி யானைகள் பலியான சம்பவங்கள் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இதுகுறித்தான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ரயில்வே துறை, தமிழ்நாடு வனத்துறையில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்தன.
அந்த அறிக்கைகளை ஆய்வு செய்த நீதிபதிகள், கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பாலக்காடு வழித்தடத்தில் செல்லும் ரயில்களின் வேகத்தை மணிக்கு 45 கிலோ மீட்டர் என்ற அளவில் கட்டுப்படுத்தியுள்ளது போதாது என்றும், வேகத்தை மேலும் குறைப்பது குறித்து நிபுணர் குழுவுடன் கலந்தாலோசித்து பிப்ரவரி 25ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் தெற்கு ரயில்வேவுக்கு உத்தரவிட்டனர்.
ரயில்வே தண்டவாளங்கள் அருகில் சூரியமின் சக்தி வேலிகளை அமைப்பது வன விலங்குகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என வனத்துறை ஆட்சேபம் தெரிவிப்பதால், இந்த விவகாரத்தில் ரயில்வே துறையும், வனத்துறையும் கலந்து பேசி தீர்வு காண வலியுறுத்திய நீதிபதிகள், அதுவரை சூரிய மின்சக்தி வேலிகள் அமைக்கவேண்டாம் என ரயில்வே அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
அதேபோல், யானைகள் கடந்து செல்வதற்கான சுரங்க பாதைகளை அமைப்பதற்கான நிதியை ஒதுக்க ரயில்வே வாரியத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ரயில் ஓட்டுனர்கள், யானைகள் வருவதை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக தண்டவாளங்களுக்கு அருகில் உள்ள தாவரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், யானைகள் கடக்கும் பகுதிகளில் அலாரங்கள் அமைக்கவும் ரயில்வே துறைக்கு உத்தரவிட்டனர்.
அடுத்தகட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவு
உணவுப்பொருட்கள் தண்டவாளங்களுக்கு அருகில் வீச வேண்டாம் எனப் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், யானைகள் வருவது குறித்து ரயில் ஓட்டுநர்களை எச்சரிக்க, கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மார்ச் 18ஆம் தேதி அடுத்தகட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய ரயில்வே துறைக்கும், வனத்துறைக்கும் உத்தரவிட்டனர்.
மேலும் வனவிலங்குகள் பாதுகாப்புக்கு நிதி ஒதுக்கக்கோரிய தமிழ்நாடு அரசு அனுப்பிய கருத்துருவை, இரு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க, மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இதுசம்பந்தமான விசாரணையை மார்ச் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: புறம்போக்கு நிலத்தைவிட்டு வெளியேறினால் மாற்று இடம் வழங்க தயார் - அரசு உத்தரவாதம்