சென்னை: ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள கோயில்கள் இடிக்கப்படுவது தொடர்பாக, தமிழ்நாடு பாஜக இளைஞர் அணித்தலைவரான வினோஜ் பி. செல்வம், தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய பதிவைப் பதிவிட்டிருந்தார்.
அவரது பதிவு, உண்மைக்கு மாறான தகவலுடன் வதந்தியைப் பரப்பி, இரு பிரிவினரிடையே வெறுப்பு மற்றும் பகைமையை உருவாக்கி, பொது அமைதியை குலைக்கும் வகையில் உள்ளதாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் புகார் அளித்திருந்தார்.
இதனை விசாரித்த, சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் காவலர்கள், வினோஜ் பி. செல்வம் மீது, கலகத்தை ஏற்படுத்துதல், இரு சமூகத்தினர் இடையே விரோதத்தை தூண்டுதல் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன்கோரி வினோஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
செய்தித்தாளில் வந்ததை ட்விட்டரில் பதிவிட்டதாகவும், கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், பாஜகவிற்கு பரப்புரை செய்யும் வகையிலேயே பதிவிட்டதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார்.
முன்பு இந்த வழக்கை விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டும், வினோஜை கைது செய்யக்கூடாது என அறிவுறுத்தி இருந்தது.
இன்று இந்த வழக்கு நீதிபதி ஆர்.பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பத்திரிகையில் வந்த செய்தியையே பகிர்ந்ததாக வினோஜ் தரப்பில் வாதிடப்பட்டது.
காவல் துறை தரப்பில் கோயில்கள் மட்டும் இடிக்கப்படுவதாகக் கூறி, மதக் கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துகளை பதிவு செய்துள்ளதாகவும், அரசியலுக்காக மதத்தை பயன்படுத்துவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்குத்தொடர்பான ஆவணங்களையும், ட்விட்டர் பதிவுகளையும் தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 11ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.
இதையும் படிங்க: மதக்கலவரத்தை தூண்டியதாக வழக்கு: பாஜக நிர்வாகிக்கு முன்பிணை மறுப்பு!