சென்னை, தண்டையார்பேட்டையில் வரதட்சணைக் கொடுமை காரணமாக பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் அரசு தரப்பில் மூன்று சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. தொடர்ந்து, தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் கணவரின் உறவினர்களான பூங்கனி, குரு பாண்டியன், தாமரைச் செல்வி ஆகியோரை குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கக்கோரி, பெண்ணின் தாய் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மகளிர் சிறப்பு நீதிமன்றம், மூன்று பேரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்த்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து பூங்கனி உள்ளிட்ட மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், குற்றச்செயலில் தொடர்பு இருப்பதற்கு ஆதாரங்கள் இருந்தால், வழக்கு விசாரணை எந்த நிலையில் இருந்தாலும், தொடர்புடையவர்களை குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்க குற்ற விசாரணை முறைச் சட்டம் 319ஆவது பிரிவின் கீழ் கீழமை நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதாகக் கூறி, சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் புதிதாக சேர்க்கப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் சேர்த்து, இந்த வழக்கை விசாரிக்கும்படியும் மகளிர் நீதிமன்றத்திற்கு நீதிபதி அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: விரைவில் தடுப்பூசி: உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரிய தமிழ்நாடு அரசு