சென்னை: புதுச்சேரியில் நகராட்சி, ஊராட்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் பட்டியல் இனத்தவருக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வார்டுகள் ஒதுக்கீட்டில் குளறுபடிகள் உள்ளதாகக் கூறி முத்தியால்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பிரகேஷ் குமார் உள்ளிட்ட பலர் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வார்டு ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினர்.
இதற்குப் புதுச்சேரி அரசுத் தரப்பில் முன்னிலையான அரசு கூடுதல் துணைத் தலைமை வழக்கறிஞர், இது தொடர்பாக வரும் திங்கள்கிழமை விளக்கம் அளிப்பதாகத் தெரிவித்தார். அப்போது நீதிபதிகள், முதல்கட்ட தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல்செய்ய வரும் 7ஆம் தேதிவரை கால அவகாசம் உள்ளதால் அதில் தலையிடவில்லை எனத் தெரிவித்தனர்.
மேலும் உள்ளாட்சித் தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காகச் சட்டத்தை மீற முடியாது எனக் கருத்து தெரிவித்து வழக்கை வரும் திங்கள்கிழமைக்கு (அக்டோபர் 4) தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க:15,000 மியான்மர் மக்கள் இந்தியாவிற்குள் குடிபெயர்வு - ஐநா தலைவர்