சென்னை: எருக்கஞ்சேரியை சேர்ந்த சத்தியநாதன், சித்ரா ஆகியோர் பொது சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் உள்ளதாகவும், இந்த ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும் என ரவீந்திர ராம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது சம்மந்தப்பட்ட கட்டிட உரிமையாளருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், விளக்கம் கிடைத்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டது. இதனையடுத்து ஆக்கிரமிப்பு இருப்பின், அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி அதிகாரிகள் அளித்த உறுதி மற்றும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என கோரி சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்பேடி, பொறியாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மண்டல உதவி பொறியாளர் பார்த்திபன் ஆகியோருக்கு எதிராக ரவீந்திர ராம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆக்கிரமிப்பு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட பிறகும் ஏன் இரண்டு ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஏன் சஸ்பெண்ட் செய்யக் கூடாது என கேள்வி எழுப்பினர்.
பின்னர் ஆக்கிரமிப்புகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணை ஜனவரி முதல் வாரத்திற்குத் தள்ளிவைத்தனர்.