மே 4ஆம் தேதிமுதல் ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன. இதையடுத்து தகுந்த இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் கோயில், மசூதி, தேவாலயங்களைத் திறக்க அனுமதிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஜலில் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
"வழிபாட்டுத் தலங்களைத் திறந்தால் தகுந்த இடைவெளி கேள்விக்குறியாகி, கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று அதிகரித்துவிடும் என்பதால் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதிக்கக் கூடாது" என ஆவடியைச் சேர்ந்த சுமதி என்பவர் இடையீட்டு மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.
இந்த இரு வழக்குகளும் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "மே 17ஆம் தேதி ஊரடங்கு முடிவடைவதால் மே 15 அல்லது 16ஆம் தேதிகளில் வழிபாட்டுத் தலங்களைத் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்" எனத் தமிழ்நாடு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
டாஸ்மாக் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட விளைவுகளையும், கோயம்பேடு சந்தையால் ஏற்பட்ட விளைவுகளையும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மனுவுக்கு மே 18ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க:கரோனா எதிரொலியால் நவகிரக தலங்கள் மூடல்!