சென்னை: நீலகிரி மாவட்டத்தில் தனியார் கிளப்பிற்கு குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தை மீட்டு, பொதுமக்கள் பயன்பட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள மவுண்ட் ப்ளசண்ட் சோசியல் கிளப்பிற்கு கடந்த 1937ஆம் ஆண்டு தமிழக அரசு ஒன்றரை ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு அளித்தது. மேலும், வருவாய்த் துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில், விதிகளை மீறியதாக கூறி அந்த குத்தகையை கடந்த 2003 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை நில நிர்வாக ஆணையரும் உறுதி செய்து உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, கடந்த 2015 ஆம் ஆண்டு கிளப்பை சீல் வைப்பதற்காக குன்னூர் தாசில்தார் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்நிலையில், அதனை எதிர்த்து கிளப் நிர்வாகம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும், மனுவானது நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையில், மவுண்ட் ப்ளசண்ட் சோசியல் கிளப்பிற்கு அரசு தரப்பில், குத்தகை வாடகையாக ஆண்டிற்கு 10 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், குத்தகை வாடகையை கிளப் நிர்வாகம் பல வருடங்களாக செலுத்தவில்லை எனக் கூறப்படும் நிலையில், 66 ஆண்டுகளுக்கான மொத்த குத்தகை தொகையாக 660 ரூபாயை காசோலையாக வழங்கி உள்ளது.
இதையும் படிங்க: அன்னிய செலாவணி மோசடி வழக்கு; டிடிவி தினகரனிடம் அபராதத்தை வசூலிக்காதது குறித்து நீதிமன்றம் கேள்வி
மேலும், அரசு தரப்பில் அளிக்கப்பட்ட குத்தகை நிலத்தை, 1972 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை தனியார் பள்ளிக்கு உள் வாடகைக்கு விட்டு 1 லட்சத்து 6 ஆயிரம் ரூபாயை கிளப் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வருவாய் துறை அறிக்கையின் விதிகளை மீறியதால் குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குத்தகை ஒப்பந்த ரத்திற்கு மறுப்பு தெரிவித்த கிளப் தரப்பினர், விளையாட்டு நிகழ்வுகளுக்காக குத்தகை நிலத்தின் ஒரு பகுதியை தனியார் பள்ளி பயன்படுத்தி கொள்ள அனுமதித்தாகவும் அதற்கான பராமரிப்பு கட்டணமாக ஆயிரம் ரூபாய் மட்டுமே பெற்றதாக தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், "குன்னூரில் அதிக சந்தை விலை மதிப்புடைய நிலத்தை குறைந்த வாடகையில் கிளப் நிர்வாகம் அனுபவிப்பதை அனுமதிக்க முடியாது எனவும், மவுண்ட் ப்ளசண்ட் சோசியல் கிளப்பிற்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலத்தை தமிழக அரசு உடனடியாக மீட்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும், மீட்கப்படும் நிலத்தை பொதுமக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் தாசில்தாரின் நடவடிக்கையை எதிர்த்து கிளப் நிர்வாகம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செயதும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இதையும் படிங்க: வளைகாப்பு நிகழ்ச்சியில் நடனமாடியதில் தகராறு... ஒருவர் கொலை; கடலூரில் நடந்தது என்ன?