சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கடந்த 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக 7 கோடி ரூபாய் வரை சொத்துகள் சேர்த்ததுள்ளதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி, மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் நடைபெற்றது. இந்த வழக்கிற்கு இரு வேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டன.
இரு வேறு தீர்ப்புகள்
முதலில் தீர்ப்பை வாசித்த நீதிபதி சத்தியநாராயணன், 'சொத்துக்குவிப்பு புகார் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்' என உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து தீர்ப்பை வாசித்த நீதிபதி ஹேமலதா, 'நீண்ட இடைவெளிக்குப்பிறகு வழக்குப் பதிந்து விசாரிப்பது தேவையற்றது. மேற்கொண்டு விசாரிப்பதால் எவ்விதப் பலனும் இல்லை' என்று கூறி, மகேந்திரன் வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக, இரு நீதிபதிகளும் இரு வேறு தீர்ப்புகளை வழங்கியதால், வழக்கை மீண்டும் விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக, நீதிபதி எம்.நிர்மல்குமார் நியமிக்கப்பட்டார்.
மேல் முறையீடு
கடந்த 5ஆம் தேதி இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை ஆகஸ்ட் 18ஆம் தேதி ஒத்திவைத்து இருந்தனர்.
அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 18) மீண்டும் இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதால், வழக்கின் விசாரணையைத் தள்ளி வைக்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடும் கண்டனம்
இதற்குத் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்.
பின்னர், 'இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கக்கூடாது என்ற உள்நோக்கத்துடனேயே, பிழைகள் கொண்ட மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
அதனை விசாரணைக்குப் பட்டியலிட முடியாதபடி ராஜேந்திர பாலாஜி தரப்பினர் முயற்சிப்பதால், இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும்' என அவர் வாதிட்டார்.
இதையடுத்து, ராஜேந்திர பாலாஜிக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் மேற்கொண்டு வாய்தா கேட்கக் கூடாது எனத் தெரிவித்தார்.
மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்காவிட்டால், அடுத்த விசாரணையின்போது இந்த வழக்கின் விசாரணை நடைபெறும் எனத் தெரிவித்து, வழக்கு விசாரணையை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளை மூட முடியாதது மனநிறைவை அளிக்கவில்லை - நீதிபதி கிருபாகரன் வேதனை