சென்னை, எண்டர்டெய்ன்மெண்ட் மொபைல் இந்தியா சர்வீசஸ் என்ற நிறுவனம், தென் இந்திய இசை கம்பெனி சங்கத்துடன் 2012ல் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. அதன்படி சங்க உறுப்பினர்களாக உள்ளவர்களிடம் இசையின் உரிமம் வழங்குவது தொடர்பாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. முதல் கட்டமாக 2 கோடியே 70 லட்சம் ரூபாயை வழங்கிய ஜெமினி நிறுவனம், குறிப்பிட்ட காலத்தில் பாக்கி தொகையை செலுத்தவில்லை. அதனால் இந்த ஒப்பந்தம் தானாக ரத்தானது.
இந்நிலையில், இசை உரிமத்தை வழங்காததுடன், வாங்கிய பணத்தை திருப்பித்தரவில்லை எனவும், பணத்தை கேட்ட போது மிரட்டல் விடுத்ததாகவும் கூறி, தென் இந்திய இசை கம்பெனி சங்கத்தின் தலைவராக இருந்த பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகளுக்கு எதிராக ஜெமினி நிறுவனம், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தது.
புகார் மனுவை கோப்புக்கு எடுத்த சைதாப்பேட்டை நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சுதா ரகுநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள், 2015ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன், உரிமையியல் பிரச்சனை தொடர்பான இந்த விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் எனக் கூறி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ‘மோதி பாத்துருவோம்’ - உத்தரகாண்ட் காட்டு யானைகள் மோதும் வைரல் வீடியோ