சென்னை: மோட்டார் வாகன விபத்து தொடர்பாகவும், போலி காப்பீடு கோரிய விவகாரம் தொடர்பாகவும் விசாரிக்க, சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2021இல் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகு, ஓசூரில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் 11 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 84 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, இதுகுறித்து சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களை அழைத்து, அவர்களின் ஒப்புதலுடன் தான் வழக்கறிஞர்கள் இந்த வழக்குகளைத் திரும்ப பெற்றார்களா என விசாரித்து, அறிக்கைத் தாக்கல் செய்யும்படி, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையக் குழுவிற்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் விசாரணையின்போது, சாலை விபத்துகளில் சிக்குபவர்களை 108 ஆம்புலன்ஸ்கள் அரசு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லாமல் தனியார் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்வதாக வழக்கறிஞர் விஜயராகவன் புகார் தெரிவித்தார்.
108 ஆம்புலன்ஸ் சேவைக்கு எதிரான இந்தப் புகார் குறித்தும், காப்பீடு மோசடி குறித்தும் விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு, ஏப்ரல் 4ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.