காற்றாலை மின்சாரத்தை வேண்டுமென்றே பயன்படுத்தாமல் இருப்பதாகக் கூறி தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்திற்கு எதிராக திண்டுக்கல்லைச் சேர்ந்த தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்கு தனி நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனையடுத்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் சங்கத்தின் சார்பிலும், தமிழ்நாடு மின்நுகர்வோர் சங்கத்தின் சார்பிலும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது நலனை கருத்தில் கொண்டும், ஏழை மக்களின் பயனடைவதற்காகவும் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ஏழு ரூபாய் கொடுத்து அதானி நிறுவனத்திடமிருந்து 21 ஆண்டுகளுக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ள அரசு, இரண்டு ரூபாய்க்கு வழங்கும் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யாமல் இருப்பதாக மனுதாரர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதன்மூலம் யூனிட்டுக்கு கூடுதலாக கொடுக்கும் ஐந்து ரூபாயை ஏழை மக்களின் நலனுக்கு பயன்படுத்தலாம் எனவும் வாதிடப்பட்டது.
இதையடுத்து, குறிப்பிட்ட மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்கிறதா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து, எவ்வளவு விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது என்பது குறித்தும், மின் உற்பத்தி நிறுவனங்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் குறித்தும், அதானி நிறுவனத்துடன் யூனிட்டுக்கு ஏழு ரூபாய்க்கு மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது உண்மையா ? என்பது குறித்தும், அதனால் இழப்பு ஏற்படும் என்பது உண்மையா? என்பது குறித்தும் மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய பாக்கி தொகை எவ்வளவு எனவும், எந்த ஆண்டில் இருந்து பாக்கி உள்ளது என்பது குறித்தும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.