கடந்த வாரம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் குழு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணியை மேகாலயா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிடமாறுதல் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
அதேபோன்று தற்போது மேகாலயா மாநில தலைமை நீதிபதியாக உள்ள ஏ.கே. மிட்டலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிடமாறுதல் செய்யவும் மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை வழங்கியது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி கொலிஜியம் குழுவிற்கு அனுப்பிய கடிதத்தில், தன்னை மூன்று நீதிபதிகளே கொண்ட மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிடமாறுதல் செய்ய வேண்டாம் என கோரிக்கைவிடுத்திருந்தார்.
தஹில் ரமாணியின் கோரிக்கையை கொலிஜியம் குழு செப்டம்பர் 3ஆம் தேதி நிராகரித்தது. தற்போது அவர் குடியரசுத் தலைவருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அக்கடிதத்தில், இந்தியாவின் பழமைவாய்ந்த சென்னை உயர் நீதிமன்றத்தில் 75 நீதிபதிகளுக்கு மேல் உள்ள நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்துவிட்டதாகவும் இதன்பிறகு மூன்று நீதிபதிகள் மட்டுமே உள்ள மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு பணியிடமாறுதல் செய்வது உகந்ததாக இருக்காது என்பதால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தாக கூறப்படுகிறது.
அக்கடிதம் குடியரசுத் தலைவரிடமிருந்து உச்ச நீதிமன்ற கொலிஜியத்துக்கு அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.