தனியார் பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க எந்த நடைமுறையும் இல்லை என்பதால், தனியார் கல்வி நிறுவனங்களின் நிதி பரிவர்த்தனைகளை, அரசு கருவூலம் மூலம் மேற்கொள்ள உத்தரவிடக் கோரி அகில இந்திய தனியார் கல்லூரிகள் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் கே.எம். கார்த்திக், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணங்கள், ஆசிரியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட செலவினங்களை கண்காணிக்காததால் 50 விழுக்காடு லாபம், பள்ளி, கல்லூரி அறங்காவலர்களின் கைகளுக்கு செல்வதாகவும், தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு எந்த கட்டணச்சலுகையும் வழங்கப்படுவதில்லை எனவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தனியார் பள்ளி, கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் மூலம் தணிக்கை செய்து கட்டண விகிதங்களை குறைக்க வேண்டும், தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, தனியார் கல்வி நிறுவனங்களின் நிதி பரிவர்த்தனைகளை அரசு கருவூலம் மேற்கொள்வது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால், இது சம்பந்தமாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என மறுத்து விட்டது. அதேசமயம், கட்டண விகிதங்களை குறைப்பது தொடர்பாக மனுதாரர், சம்பந்தப்பட்ட அரசுத்துறைக்கு மனு அளிக்கலாம் எனவும், அதை அரசு பரிசீலிக்கலாம் என்றும் கூறி வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க...பேரவையில் இன்று ஆளுநர் உரை மீதான விவாதம்