லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனங்களில் ஏப்ரல் 30ஆம் தேதி வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். அத்துடன் அவரது நிறுவன ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினர். அப்போது, மார்ட்டினின் ஹோமியோபதி கல்லூரியில் காசாளராக பணிபுரிந்து வரும் கோவை வடமதுரையைச் சேர்ந்த பழனிச்சாமியிடம் வருமான வரித்துறையினர் தொடர் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், மே 3ஆம் தேதி காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளியங்காடு அருகே உள்ள குட்டையில் காசாளர் பழனிச்சாமி உடல் பிணமாக கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், வருமான வரித்துறையினரின் சித்ரவதை காரணமாகவே தன் தந்தை மரணமடைந்ததாகவும், தனது தந்தையின் உடலில் சில இடங்களில் ரத்த காயங்கள் இருப்பதால் இது கொலையாக இருக்கலாம், அதனால் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி பழனிச்சாமியின் மகன் ரோஹின்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. "பழனிச்சாமி காவல்துறை காவலிலோ, வருமான வரித்துறை காவலிலோ மரணமடையவில்லை. நிபுணர்களை கொண்டு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு ஆர்.டி.ஓ. விசாரணையும் நடத்தப்பட்டது" என்று, அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். விசாரணையின் இறுதியில், பழனிச்சாமியின் உடலை கோவை அரசு மருத்துவமனையிலேயே வைத்திருக்க வேண்டும். இந்த வழக்கு குறித்து காவல்துறை தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.