தமிழ்நாடு சிறப்பு காவல் பணி விதிகளில் 2003ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி, காவல்துறை பணிக்கு விண்ணப்பித்தவர்கள், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு, சந்தேகத்தின் அடிப்படையில் விடுதலை ஆகியிருந்தாலோ, விடுவிக்கப்பட்டிருந்தாலோ அவர்களையும் குற்ற வழக்குடன் தொடர்புடையவராக கருத வேண்டும். குற்ற வழக்கு நிலுவையிலிருந்து பின்னர் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டிருந்தால் அடுத்த தேர்வு நடைமுறையில் கலந்து கொள்ள உரிமை கோரலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த விதிகளை சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வும் தனது தீர்ப்பில் உறுதி செய்துள்ளது.
இந்த பின்னணியில், 2017ஆம் ஆண்டு நடந்த காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில், குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், வழக்குகளை மறைத்ததாகவும் கூறி, தங்களது விண்ணப்பத்தை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நிராகரித்ததை எதிர்த்து பிரவீன்குமார், அழகுராஜ் உள்ளிட்ட 46 பேர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், காவல்துறை பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அப்பழுக்கற்ற குணநலன்களும் நேர்மையும் கொண்டிருக்க வேண்டும், குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்களாக இருந்தால் காவல்துறை பணிக்கு உகந்தவர்கள் அல்ல என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி, குற்ற வழக்குகளை முழுமையாக மறைத்தவர்களின் விண்ணப்பங்களையும், சந்தேகத்தின் அடிப்படையில் குற்ற வழக்குகளில் இருந்து விடுதலை பெற்றவர்களின் விண்ணப்பங்களையும் நிராகரித்த தேர்வு வாரிய உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டார்.
அதேசமயம் வழக்கு நிலுவையில் இருந்தால் அவர்களை தேர்வில் கலந்து கொள்ளவும், பணி நியமனம் வழங்குவதற்கும் அரசு பரிசீலிக்க வேண்டுமெனவும், ஆனால் குற்ற வழக்குகளில் சமரசம் செய்து கொண்டதன் மூலம் விடுதலை பெற்றவர்களை நியமிப்பதன் மூலம் காவல் துறைக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பதை கருத்தில் கொண்டு அவர்களுடைய பணி நியமனம் குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.