சென்னையில் போலியாக கால்சென்டர் நடத்தி பொதுமக்களிடம் இன்சூரன்ஸ், தனி நபர் கடன் பெற்றுத் தருவதாக ஆசைவார்த்தை கூறி முன்பணத்தைப் பெற்று ஒரு கும்பல் ஏமாற்றி வந்துள்ளது. இந்தாண்டு மட்டும் இதுதொடர்பாக 365 புகார்கள் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் பதிவாகியுள்ளன. இப்புகார்களின் அடிப்படையில் வங்கி மோசடி தடுப்புப் பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்துள்ளனர். அப்போது, ஏழு கும்பல் பல்வேறு இடங்களில் பிரிந்து போலி கால் சென்டர் நடத்தி இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
குறிப்பாக, கரோனா போன்ற இக்கட்டான நேரங்களில் பொதுமக்களைக் குறிவைத்து இம்மோசடி நடந்துவருவதை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும், திருவான்மியூர் பகுதிகளிலும் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த கால் சென்டரில் பணியாற்றிய தியாகராஜன்(38), கோபி நாத்(28), மணிபாலா(22) ஆகிய மூவரை நேற்று முன்தினம் (ஜூலை 10) காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், தியாகராஜன் என்பவர் கடந்த வருடம் அண்ணா சாலையில் போலி கால் சென்டர் நடத்தி மிகப்பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்ட செல்வா என்பவரது கூட்டாளி என்பதும், இந்த மோசடி கும்பலின் தலைவனாக செல்வா செயல்பட்டு பல போலி கால்சென்டர்களை உருவாக்கி பல்வேறு பகுதிகளில் செயல்பட வைத்ததும் தெரியவந்தது.
இதேபோல், நேற்று மற்றொரு கும்பலைச் சேர்ந்த ஜாவித்(38), முகமது ஷாகீர்கான், ராஜ்குமார்(46), கோகுல கிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதுவரை ஏழு பேரை குற்றப்பிரிவு காவலர்கள் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மோசடி தொடர்பாக 30 குற்றவாளிகளைக் கைது செய்துள்ளதாகவும், ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் வரை பொதுமக்கள் மோசடியாளர்களிடம் பறிகொடுத்துள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, செல்போனில் தொடர்புகொண்டு லோன் தருவதாக கூறி முன்பணமாக செலுத்துமாறு கேட்டாலோ அல்லது டெபிட் கார்டு காலம் முடிவடையப் போகிறது என ஓடிபி எண்களைக் கேட்டாலோ பொதுமக்கள் தயவுசெய்து கொடுக்க வேண்டாம் என காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு நடவடிக்கைகள்: கள ஆதரவுக் குழு அமைத்து தமிழ்நாடு அரசு ஆணை!