சென்னையின் நீராதாரம்
பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகள் சென்னை மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்குகின்றன. இந்த ஏரிகளில் 11.5 டி.எம்.சி தண்ணீரை சேமித்து வைக்க முடியும். கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின்படி பூண்டி ஏரிக்கு 318 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மார்ச் மாத நிலவரப்படி இந்த 4 ஏரிகளிலும் 6450 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு இருந்தது. பூண்டியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு 453 கன அடி தண்ணீரும், சென்னை குடிநீர் வாரியத்திற்கு 10 கன அடி தண்ணீரும் அனுப்பப்பட்டு வருகிறது.
தண்ணீர் பிரச்னையில் அரசின் செயல்பாடு
கரோனா காலத்தில் கொடுக்கப்பட்ட பணிகளில் வெற்றி பெற்றுள்ளோம். அடுத்தகட்டப் பணியை எதிர்கொள்ளத் தயாராவோம் என தண்ணீர் பிரச்னை குறித்து குடிநீர் வாரிய செயல் இயக்குநர் பிரபுசங்கர் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.
அதில், பெருங்குடி மற்றும் நெசப்பாக்கத்தில் மறு பயன்பாட்டிற்கான தண்ணீரை சுமார் 10 எம்.எல்.டி வரை சுத்திகரிப்பு செய்துள்ளோம். பெரும்பாக்கம், அய்யனாம்பாக்கம், பெருங்குடி மற்றும் ரெட்டேரி பகுதிகளில் உள்ள சிறிய ஏரிகள் மூலம் தண்ணீர் எடுக்கும் பணியை செய்துள்ளோம்.
பள்ளிக்கரணை, நெற்குன்றம், வளசரவாக்கம் உள்ளிட்ட 10 பகுதிகளில் குடிநீர் விநியோகப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டுள்ளோம். அழைத்தால் குடிநீர் இணைப்பு திட்டத்தின் கீழ் 15 நாட்களில் இணைப்புகள் வழங்கி இதுவரை 1 லட்சம் இணைப்புகள் கொடுத்துள்ளோம்.
புதிதாக இணைந்த பகுதிகளில் லாரிகள் மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் வழங்கியுள்ளோம். நகரின் அனைத்து குடிநீர் இணைப்பு பகுதிகளையும் ஜி.எஸ்.ஐ மேப் மூலம் ஒருங்கிணைத்துள்ளோம்.
200 புதிய இடங்களில் கிடைத்த நிலத்தடி நீர் பகுதிகளை கண்டறிந்து அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம். தூய்மைப் பணியாளர்களுக்கு போதிய பயிற்சி மற்றும் மறுவாழ்வு அளிக்கும் திட்டங்களை சரிவர செயல்படுத்தியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
கள நிலவரம் என்ன? மக்கள் என்ன சொல்கிறார்கள்?
இந்த சூழலில் ராயபுரம் பகுதியைச் சேர்ந்த மக்கள் தாங்கள் தண்ணீர் பிரச்னையால் பெரிதும் அவதிப்படுவதாகவும், அரசாங்கம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
சென்னை மக்கள் வெப்பத்தின் தாக்கத்தால் அவதியுற்று வருகின்றனர். சென்னை முழுவதுமாக 200 வார்டுகளுக்கு குழாய்கள் மற்றும் லாரிகள் மூலம் தினந்தோறும் சுமார் 700 எம்.எல்.டி குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவிக்கிறது. ஆனால், அவை சென்னையின் பல பகுதிகளில் தினந்தோறும் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்கிறது. குறிப்பாக ராயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாகவும், அதிலும் காலை நேரத்தில் ஒன்றரை மணி நேரம் மட்டுமே வழங்கப்படுவதால் தங்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய இயலவில்லை என்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
குடிநீர் பற்றாக்குறை தொடர்பாகப் பேசிய அப்பகுதியில் வசிக்கும் பெண்கள், "எங்கள் வீடுகளில் இருக்கும் போர்வெல்களில் தண்ணீர் சுத்தமாக வற்றிவிட்ட நிலையில், முற்றிலும் சென்னை குடிநீர் வாரியத்தால் வழங்கப்படும் தண்ணீரை மட்டுமே நம்பியுள்ளோம். ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் வழங்கப்படுகிறது. அதுவும் அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கி அதிகபட்சம் 2 மணி நேரம் மட்டுமே வருகிறது. இதனால் அதிகாலையில் சாலையோரம் காத்திருப்பதுடன், இருக்கும் இரண்டு மணி நேரத்தில் தேவையான தண்ணீரை பிடிக்க முடியாமல் போய்விடுகிறது. அதனால் தண்ணீர் வழங்கும் நேரத்தை அதிகப்படுத்தி வழங்க வேண்டும், தினமும் ஒருமுறையாவது தண்ணீர் வழங்கப்பட வேண்டும்" என்கின்றனர்.
நகரின் பிற பகுதிகளில் என்ன நடக்கிறது என நாம் விசாரித்தபோது, கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் பொருட்டு சென்னை நகர் முழுவதும் சுமார் 900-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது. டேங்கர் லாரிகள் மூலம் இதுவரை குடிநீர் வழங்கபட்ட பகுதிகளிலும், 900 லாரிகள் நிறுத்தப்பட்ட பகுதிகளுக்கும் பைப்கள் மூலமே குடிநீர் அனுப்பப்படுகிறது. இதனால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.
பெரும்பாலான பகுதிகளுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே தண்ணீர் வழங்குவதையே குடிநீர் வாரியம் வழக்கமாகக் கொண்டுள்ளது எனத் தெரியவந்தது. ஆனால், தண்ணீர் வழங்கப்படும் நாட்களில் அதிகபட்சமாக 3 மணி நேரம் தண்ணீர் வழங்கப்படுகிறது என குடிநீர் வாரியத்தில் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, தண்டையார்பேட்டை, ராயபுரம், புளியந்தோப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இதே நிலை நீடிக்கிறது என மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். குறிப்பாக குடிசைமாற்று வாரியத்தின் மூலம் குடியமர்த்தப்பட்டுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்களே இதில் அதிகம் பாதிக்கப்படும் மக்களாக இருக்கின்றனர். மேற்படி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீண்டும் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கப்படுமா அல்லது வேறு என்ன மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என சென்னை குடிநீர் வாரிய மேற்பார்வை பொறியாளர் ராமசாமியிடம் கேட்டபோது, " சம்மந்தப்பட்ட பகுதிகளில் விசாரணை நடத்தி குடிநீர் வழங்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.
ராயபுரம் எஸ்.என்.செட்டி தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரைதான் வழங்கப்படுகிறது என மக்கள் கூறுகிறார்கள். மேலும், அவ்வாறு மூன்று மணி நேரம் தண்ணீர் வழங்கியிருந்தால் ஓரளவு எங்களின் தேவைக்கு எடுத்து வைத்துக்கொள்ள முடியும் என்கின்றனர். இவர்களின் குற்றச்சாட்டு தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய ராயபுரம் பகுதியின் செயற்பொறியாளர் கஜபதியிடம் கேட்டபோது, "குறைந்தபட்ச நேரமாக மூன்று மணி நேரம் வரை குடிநீர் வழங்குகிறோம். நீங்கள் சொல்லும் குறைபாடு குறித்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் கள ஆய்வு செய்ய உத்தரவிட்டு, அவ்வாறு குடிநீர் வழங்கும் நேரம் குறைக்கப்பட்டிருந்தால் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.
வழக்கமாக கோடை காலத்தில் கடுமையான குடிநீர் பிரச்னையை சந்திக்கும் சென்னை, இந்த முறை குடிநீர் பிரச்னையில் இருந்து தப்பியுள்ளது. கரோனா சூழலில் தொழிற்சாலைகள் எதுவும் சரியாக இயங்காததே சென்னைவாசிகள் தப்பித்ததற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. சென்னையின் நீர் தட்டுப்பாடை சமாளிக்க ஒரு மாதத்துக்கு ஒரு டிஎம்சி அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. தற்போதைய சூழலில் 6.5 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.
தண்ணீர் விநியோகத்தில் சிக்கல் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். அது வெகு விரைவில் சரி செய்யப்படும் என அரசு தரப்பு தெரிவிக்கிறது.