சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியார் மயமாக்குவதை எதிர்த்து இன்று காலை முதல் மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் அனைத்து வாயில்களையும் முற்றுகையிட்டு மின் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மின்துறை அமைச்சர் தங்கமணி இன்று பிற்பகல் மின்வாரிய தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர், தனியார் நிறுவனம் மூலம் ஒயர்மேன், ஹெல்ப்பர் போன்ற பணியிடங்களை நிரப்பும் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.
இதனையடுத்து அவுட்சோர்சிங் மூலம் ஹெல்பர் மற்றும் ஒயர்மேன் பணியிடங்கள் நிரப்பும் உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை பொறியாளர் பணியாளர் அறிவித்துள்ளார்.
ஆனால் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர், துணை மின் நிலையங்களை தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் எனக் கூறி மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் பணி முடிந்து மின்சார வாரிய அலுவலகத்திலிருந்து வெளியே செல்லும் பணியாளர்களை காவல்துறையினர் பாதுகாப்புடன் வெளியேற்றினர்.
இதையும் படிங்க: தனியார் மூலம் மின்வாரிய ஊழியர்களை நியமிக்கும் அரசாணை ரத்து!