இந்திய-சீன எல்லைப் பிரச்னைகள் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் காணொலிக் காட்சி மூலம் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட ஸ்டாலின் அப்போது அவர், "எல்லையில் இறுதிவரை போராடி தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ள அனைத்து இந்தியப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளது போல், ”உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீண் போகாது”. அந்தத் தியாகங்கள் இந்த நாட்டை மேலும் மேலும் ஒருமைப்படுத்தி நாட்டு மக்களுக்கு வலிமையை ஊட்டும்.மேலும் இங்கே பல்வேறு அரசியல் இயக்கங்கள் வெவ்வேறு கருத்தியல்களுடன் இயங்லாம். நாட்டுப்பற்று என வந்துவிட்டால் நமது குடிமக்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய ஒரு தாய்ப் பிள்ளைகளாக ஒற்றுமையுடன் இணைவோம். இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாத்திட வேண்டும் என்ற ஒற்றை நோக்கோடுதான் நாம் அனைவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறோம்; அதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை.
”இந்தியா அமைதியை விரும்புகிறது. தேவைப்பட்டால் தக்க பதிலடி கொடுக்கவும் தயங்காது” என்று பிரதமர் கூறியிருப்பதைத் திமுக சார்பில் நான் வரவேற்கிறேன். இத்தருணத்தில் இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் பாதுகாக்க, பிரதமர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் திமுக உறுதியுடன் துணைநிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரே நாடாக நாம் முன்சென்று, இந்திய நாட்டின் பெருமையை நிலைநாட்டிடுவோம்" எனப் பேசினார்.