சென்னை: ஒடிசாவின் பஹனாகா ரயில் நிலையம் அருகே கடந்த ஜூன் 2ஆம் தேதி இரவு, ஷாலிமார் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு - ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்கள் என மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் தேசத்தையே உலுக்கியது. இந்த விபத்தில் இதுவரை 275 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தகாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த கோர விபத்தில் காயமடைந்த சென்னை காசிமேடைச் சேர்ந்த தரணி (34) என்பவர் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் ஒரு கனரக ஏற்றுமதி நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். விபத்து நடக்கும் முதல் நாள் கனரக வாகனங்களை வங்காளதேசத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றனர்.
பிறகு சம்பவம் நடந்த நாள் அன்று ஷாலிமரிலிருந்து சென்னை நோக்கி புறப்பட்ட நிலையில், அவர் பயணம் செய்துள்ளார். ரயில் வந்து கொண்டிருக்கும்போது திடீரென ஒரு பெரிய சத்தம் கேட்டு அதிர்ச்சியுற்றதாக கூறியுள்ளார். மேலும், தரணி ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "இந்த விபத்தில் நான் பிழைத்தது எப்படி என எனக்கு தெரியவில்லை. இது எனது பெற்றோர் செய்த புண்ணியம் என நினைக்கிறேன். இந்த விபத்தில் எனது தலையில் பலத்த அடி ஏற்பட்டு ரத்தக் கசிவு ஏற்பட்டது. இருப்பினும், வலியைத் தாங்கிக் கொண்டு குழந்தைகள் மற்றும் வயதானவர்களை காப்பாற்றினேன்.
விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்கு பிறகு உயர் அதிகாரிகள் வந்தனர். ஆம்புலன்ஸ் வாகனங்களும் வந்தடைந்தன. பிறகு காயமுற்றவர்களை ஒரு பேருந்தில் ஏற்றி ஒரு இடத்தில் இறக்கி விட்டு உணவு வாங்கி கொடுத்தனர். அதிகாரிகள் எங்களை மற்றொரு ரயில் மூலம் புவனேஸ்வர் வரை அழைத்துச் சென்று மற்றொரு ரயில் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
அது என்னவென்றே எனக்கு தெரியவில்லை. பிறகுதான் தெரிந்தது, தண்டவாளத்தில் சிக்னல் சரியாக வேலை செய்யாததால் மூன்று ரயில்கள் ஒரே தடத்தில் மோதியுள்ளன. சென்னை வந்து இறங்கிய பிறகு தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் எங்களிடம் மருத்துவ ரீதியாக விசாரணை செய்து நல்ல முறையில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இங்கு நல்ல தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனிடையே, நான் வேலை பார்த்த கம்பெனியில் இருந்து ஒருவர் கூட என்னை விசாரிக்கவில்லை. பல முயற்சிக்கு பிறகு, அந்த கம்பெனி அலுவலகத்தில் இருந்து ஒரு வேலை பார்க்கும் உதவியாளரிடம் 10,000 ரூபாய் கொடுத்து அனுப்பியுள்ளனர். நான் பணத்திற்காக இதை கூறவில்லை. என்னைப் போன்று வேலை பார்க்கும் பெரும்பாலான வேலையாட்கள் கதி இப்படித்தான் இருக்கும். இதற்கு அரசு ஒரு முடிவு எடுக்க வேண்டும்” என கூறினார்.
மேலும், ஏன் கம்பனியிலிருந்து ஒருவர் கூட வரவில்லை என்ற கேள்விக்கு, “அது என்ன விவரம் என எனக்கு தெரியவில்லை. குடும்பத்தில் கஷ்டப்படுகின்ற ஓட்டுநர்களை வேலைக்கு சேர்க்கின்றனர். ஆனால், இது போல கஷ்டம் வரும்போது ஓட்டுநர்களை கண்டு கொள்வதில்லை. ஒரு வேலை ஓட்டுநர்களை காலத்திற்கு ஏற்றதுபோல பயன்படுத்திக் கொள்கிறார்களோ என்றுதான் தோன்றுகிறது” என பதில் அளித்தார்.
இதையும் படிங்க: Train Accident: ஒடிசா ரயில் விபத்தில் பலரது உயிரை காப்பாற்றிய தஞ்சாவூர் வெங்கடேஷ்.. சம்பவத்தை விளக்கும் வீடியோ!