சென்னை பெருங்குடியில் சாம் கன்சல்டிங் சர்வீசஸ் என்ற கம்பெனியை நடத்தி வருபவர் சம்பத் குமார் (51). இவர், அடையாறு சைபர் பிரிவு காவல் நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகாரில் தனது நிறுவன வங்கி கணக்கான எஸ்.பி.ஐ கணக்கிலிருந்து தானாகவே 2 லட்சத்து 55 ஆயிரத்து 552 ரூபாய் டெபிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில் உடனடியாக சைபர் கிரைம் காவல் துறையினர், விசாரணையை நடத்தியுள்ளனர். விசாரணையில் சம்பத் குமாரின் வங்கி கணக்கிலிருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது உண்மை என தெரியவந்தது. இதனால், உடனடியாக சம்பந்தப்பட்ட எஸ்.பி.ஐ வங்கி அலுவலருக்கு கடிதம் அனுப்பி, மோசடி கும்பலின் வங்கி கணக்கிற்கு செல்வதற்கு முன்பாக பணம் தடுத்து நிறுத்தப்பட்டு, சம்பத் குமாரின் வங்கி கணக்கிற்கு திரும்பி அனுப்பப்பட்டது.
இதனால், திருடப்பட்ட ரூபாயை மீட்டு கொடுத்த காவல் துறையினருக்கு சம்பத் குமார் நன்றியை தெரிவித்தார். இதேபோல், அடையாறு திருவள்ளுவர் நகரில் வசித்து வரும் ஆசிரியர் விசாலாட்சி(33) என்பவர் தனது தோழியின் செல்ஃபோன் எண்ணிற்கு ஏர்டெல் செயலியில் ரீசார்ஜ் செய்துள்ளார். அப்போது ரீசார்ஜ் ஆகாமல் பணம் மட்டும் எடுத்துகொள்ளப்பட்டதால் விசாலாட்சி உடனே இணையதளம் மூலமாக ஏர்டெல் கஸ்டமர் கேர் எண்ணை தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது, அந்த நபர் பணத்தை திருப்பி செலுத்துவதாக விசாலாட்சிக்கு நம்பிக்கை அளித்துவிட்டு, தான் அனுப்பும் ஏர்டெல் செயலியை மட்டும் பதிவிறக்கம் செய்து அதில் 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் பணம் வந்துவிடும் எனத் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய விசாலாட்சி, அந்த செயலியை பதிவிறக்கம் செய்து அதில் ஓடிபி எண் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை பதிவிட்டுள்ளார்.
திடீரென்று விசாலாட்சியின் வங்கி கணக்கிலிருந்த 49,999 ரூபாய் பணம் டெபிட் ஆகியுள்ளது. தொடர்ந்து, மீண்டும் 25 ஆயிரம் ரூபாய் பணம் டெபிட் ஆகியதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த விசாலாட்சி, போலியான ஏர்டெல் கஸ்டமர் எண்ணை தொடர்பு கொண்டு ஓடிபி விவரங்களை அளித்து மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்து. உடனடியாக அடையாறு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய சைபர் கிரைம் காவல் துறையினர், முதற்கட்டமாக விசாலாட்சி சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் கஸ்தூரிபா கனரா வங்கி கிளை அலுவருக்கு கடிதம் அனுப்பப்பட்டு, விசாலாட்சியின் பணம் ரேசர் பே வேலட்டிற்கு மாற்றப்பட்டது தெரியவந்தது.
இதனால், ரேசர் பே நிறுவன அலுவலரை தொடர்பு கொண்டு குறிப்பிட்ட பணம் மோசடி கும்பலின் வங்கி கணக்கிற்கு செல்லுவதற்கு முன்பே தடுத்து நிறுத்தப்பட்டு, மீண்டும் விசாலாட்சியின் வங்கி கணக்கிற்கே 69 ஆயிரத்து 750 ரூபாய் அனுப்பப்பட்டது. இதனால், இழந்த பணத்தை மீட்டு கொடுத்த காவல் துறையினருக்கு விசாலாட்சி நன்றி தெரிவித்தார்.
மேலும், பொதுமக்கள் சரியான கஸ்டமர் கேர் எண்ணை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும், இணையதளத்தில் தேடி மோசடிகாரர்கள் உருவாக்கிய கஸ்டமர் எண்ணை தொடர்புகொண்டு, பணத்தை இழக்க வேண்டாம் என சைபர் கிரைம் காவல் துறையினர், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை சைபர் கிரைம் பிரிவில் 602 வழக்குகள் பதிவு - பொதுமக்களுக்கு காவல் துறை எச்சரிக்கை!