சென்னை: சென்னை வியாசர்பாடி கணேசபுரம் ரயில்வே தண்டவாளம் அருகே பம்ப் செட் இருக்கும் இடத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பதாகப் புளியந்தோப்பு காவல் ஆய்வாளர் பிரவீன் குமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்று காவல் துறையினர் சடலத்தைக் கைப்பற்றி ஆம்பூலன்ஸ் மூலம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து புளியந்தோப்பு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இந்த கொலை வழக்கு தொடர்பாக சூர்யா (24), அவரது கூட்டாளிகளான மணிகண்டன் (23), சாமுவேல் (19), மணிகண்டன் (20) ஆகிய 4 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து இவர்களிடம் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட சூர்யாவின் உறவினர் கிரி என்பவர் இறந்து போனதும், அவரது மறைவிற்கு சீனு வராததால், அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு, சீனுவை கொலை செய்ய சூர்யா திட்டமிட்டு, தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சிலை திருட்டு: சென்னை அரும்பாக்கம் வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று (டிச.23) வைகுண்ட ஏகாதசி திருநாள் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், நேற்று (டிச.22) இந்த கோயில்களின் இரண்டு சிலைகள் போலி என தெரியவந்துள்ளது. இதையடுத்து, இது தொடர்பாக அறநிலையத்துறை, காவல்துறை மற்றும் தொல்லியல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆய்வு செய்த தொல்லியல் துறையினர் ஸ்ரீ மான் நாதமுனி மற்றும் ஆஞ்சநேயர் சிலைகள் பழங்காலத்துச் சிலை என தெரிவித்துள்ளனர். பின்னர் இது குறித்து தீவிர விசாரணையானது நடைபெறும் எனவும், இது தொடர்பாக முன்னாள் இருந்த கோயில் அதிகாரிகள், சிலைக்குப் பூஜை செய்பவர்கள் ஆகியோரிடம் தேவைப்பட்டால் விசாரணையானது நடத்தப்படும் என தெரிவித்தனர்.
மேலும், இது தொடர்பாகக் காவல் துறையினர் தரப்பில், இந்த சிலையானது கோயிலின் வெளி பிராகரத்தில் இருக்கும் சிலைகள் எனவும், தொல்லியல் துறையினரின் விரிவான அறிக்கை வந்தவுடன் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மழை வெள்ள பாதிப்பால் சான்றிதழ் சேதமா? தென்மாவட்ட மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!