சென்னை மாநகராட்சி கல்வித் துறையின்கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் உள்ளன.
கடந்த ஆண்டுகளில் மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்க்கை குறைந்து கொண்டே சென்றது. மாநகராட்சி கணக்குப்படி அதிகபட்சமாக 2009-2010 ஆண்டில் ஒரு லட்சத்து மூன்றாயிரத்து 51 மாணவர்கள் மாநகராட்சிப் பள்ளியில் சேர்ந்துள்ளனர்.
2010-2011 ஆண்டில் ஒரு லட்சத்து 320 மாணவர்களும், 2011-2012 ஆண்டில் 95 ஆயிரத்து 664 மாணவர்களும், 2012-2013 ஆண்டில் 88 ஆயிரத்து 340 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். அடுத்த அடுத்த ஆண்டுகளில் மாணவர்களின் சேர்க்கை குறைந்.துகொண்டே போனது. கடந்த ஆண்டு 83 ஆயிரத்து 98 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
ஆண்டுக்கு ஆண்டு மாணவர்களில் சேர்க்கை குறைந்துகொண்டே இருந்ததையடுத்து, மாநகராட்சி ஆணையர் ஆகஸ்ட் 19ஆம் தேதி மாநகராட்சியின்கீழ் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியரின் தலைமையில் ஆசிரியர்களை உறுப்பினராக கொண்டு ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு குழுவை அமைத்தார்.
"இக்குழுவில் உள்ள ஆசிரியர்கள் ஒதுக்கப்பட்ட பகுதிகளில் இடைநிற்றல், பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளின் விவரங்களைச் சேகரித்து உரிய படிவத்தில் பூர்த்திசெய்து நாள்தோறும் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆசிரியரும் தினமும் 50 குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் விவரங்களை உரிய படிவத்தில் சேகரித்து தலைமை ஆசிரியர்களிடம் வழங்க வேண்டும்" என உத்தரவிட்டார்.
"இதன் அடிப்படியில் செயல்பட்டதால் தற்போது 88 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்" என்று மாநகராட்சி உதவி கல்வி அலுவலர் முனியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, "மாநகராட்சிப் பள்ளிகளில் கடந்தாண்டு 83 ஆயிரம் மாணவர்கள் பயின்றுவந்தனர், இந்தக் கல்வி ஆண்டில் 88 ஆயிரத்திற்கும் மேல் மாணவர் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இன்னும் இந்தச் சேர்க்கை உயரும் என நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த மிகப்பெரிய சாதனையை செய்ய எங்கள் ஆசிரியர் பங்கு அதிகம். மேலும் மாநகராட்சி ஆணையர் வழிகாட்டுதல், இணை ஆணையர் அந்த வழிகாட்டுதலைச் சிறப்பாக எங்களிடம் எடுத்துரைத்தார், அதன் காரணமே எங்களால் இந்தச் சாதனையை செய்ய முடிந்தது.
தலைமை ஆசிரியரின் தலைமையில் ஆசிரியர்களை உறுப்பினராகக் கொண்டு குழு அமைத்து ஒரு ஆசிரியர் 50 வீடுகள் வீதம் சென்று அந்த வீட்டில் மாணவர்கள் படிக்கின்றனரா, எங்கே படிக்கிறார்கள், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டாரா என்று எல்லாம் விவரம் சேகரித்தோம்.
மாநகராட்சியின்கீழ் மூன்றாயிரம் ஆசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர். ஒரு ஆசிரியருக்கு 50 வீடு என்றால் ஒரு லட்சத்து ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களின் விவரங்களை நாங்கள் சேகரித்தோம். படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்ட குழந்தைகள், வேறு காரணங்களுக்காகப் பள்ளியை விட்டு நின்றவர்களைக் கண்டறிந்து மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்த்தோம்.
கிட்டத்தட்ட 89 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கடந்த ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போதுதான் சேர்க்கை அதிகரிக்கிறது.
நாங்கள் விவரங்களைச் சேகரித்தபின், பள்ளி இடைநிற்றல் மாணவர்கள் கிட்டத்தட்ட எட்டாயிரம் முதல் ஒன்பதாயிரம் பேரை, ஆசிரியர் மாநகராட்சி பள்ளியில் சேர்த்துள்ளனர். மேலும் இடைநிற்றல் மாணவர்களில் தனியார் பள்ளியில் பயின்ற மாணவர்கள் உண்டு.
இது மட்டுமில்லாமல் மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களில் சேர்க்கை, தரத்தை உயர்ந்த டிஜிட்டல் வசதியுடன் வகுப்பறை, பள்ளி முழுவதும் இணையதளம் வசதி அனைத்தும் அமைக்கும் பணி தொடங்கிவிட்டது.
சிட்டிஸ் திட்டம் என்ற அடிப்படையில் 48 பள்ளிகள் ஸ்மார்ட் பள்ளியாக மாற உள்ளது. இந்தப் பள்ளிகளில் அனைத்து வகுப்பறைகளும் டிஜிட்டல் வசதியுடன் இருக்கும், பள்ளி முழுவதும் இணையதளம் வசதி இருக்கும்.
இதுபோன்று கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய்கு இந்தத் திட்டம் செயல்பட உள்ளது. இது அனைத்தையும் நடைமுறைப்படுத்தினால் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாநகராட்சிப் பள்ளிகள் மாறிவிடும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 5 நொடி சிசிடிவி! காரைக்காலில் திருடியவரை மேட்டுப்பாளையத்தில் கைது செய்த காவல் துறை!