சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், "கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க நகர் மண்டலத்திற்கு உட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் மழைநீர் தேங்கியது. புளியந்தோப்பு பகுதி மழைநீர் ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால்கள் வழியாக சென்று காந்தி கால்வாயில் கலக்கிறது. தற்போது உள்ள மழைநீர் வடிகால் செங்கல் மற்றும் உரல் (Brick and mortar) வடிகால்களாக உள்ளன. இந்த வடிகால்களில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் இணைப்புகளும் உள்ளன.
மேலும் இந்த மழைநீர் வடிகால்களில் 2 செ.மீ முதல் 3 செ.மீ அளவிற்கான மழைநீரை மட்டுமே கொண்டு செல்லும் நிலையில் உள்ளது. இதனால் தற்போது புளியந்தோப்பு நெடுஞ்சாலை, டெமலஸ் சாலை, டிகாஸ்டர் சாலைகளில் அமைக்கப்படவுள்ள மழைநீர் வடிகால்கள் மூன்று அல்லது நான்கு இடங்களில் காந்தி கால்வாயில் சென்று கலக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. புளியந்தோப்பு பகுதிகளில் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசால் ரூ.7.10 கோடி நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களில் மாநகராட்சி பொறியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தொடர் ஆய்வு மற்றும் வல்லுநர்களின் ஆலோசனை பெற்று இவ்விடங்களிலும் இனிவரும் காலங்களில் மழைநீர் தேங்காவண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆடுமேய்க்க சென்றவரைப் பிடித்து தாக்கிய காவலர் - பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் முற்றுகைப்போராட்டம்