சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளில் அரசு நிதியில் இருந்து மக்கள் பயன்பாட்டிற்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளன. சுமார் ரூ.2 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் பூங்காக்கள் நகரத்தின் முக்கிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக சின்ன போரூரில் 151ஆவது வார்டில் அரசு பூங்கா உள்ளது. இங்கு ஸ்கேட்டிங் பயிற்சிக்காக சின்ன போரூரை சேர்ந்த வீரர்கள் வருகின்றனர். இந்நிலையில், ஸ்கேட்டிங் பயிற்சிக்கு வருபவர்களிடம் கட்டணம் வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்து, அதனை தனியாருக்கு ஒப்பந்தம் விட்டுள்ளது. இதனால், கடந்த ஓராண்டுக்கு மேலாக பூங்காவில் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொள்ளும் வீரர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியின் கட்டண வசூலை கண்டித்து சின்ன போரூர் பூங்கா முன்பு ஸ்கேட்டிங் வீரர்கள் மற்றும் பெற்றோர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வீரர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இலவசமாக ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததால், ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து ஸ்கேட்டிங் வீரர்கள் கூறுகையில், "தனியார் பயிற்சி மையத்தில் கட்டணம் செலுத்தி பயிற்சி கொள்ள முடியாமல்தான், அரசு பூங்காவில் பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். ஆனால், நபர் ஒன்றுக்கு ரூ.500 கேட்டால் எங்கு செல்வது. ஏழை எளிய வீரர்களால், இந்த தொகையை எப்படி கொடுக்க முடியம். பூங்காவில் கழிவறை வசதி கிடையாது. பூங்காவும் சுகாதாரமானதாக இல்லை. இதனை சீர் செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்காமல், அடித்தட்டு பின்னணியில் இருந்து வரும் வீரர்களிடம் கட்டணம் வசூலிப்பது கண்டிக்தக்கது. இதனை மாநகராட்சி திரும்ப பெற வேண்டும்", என்றனர்.