மதுரை: பள்ளி மாணவியை சென்னைக்கு அழைத்து வந்து திருமண பதிவு சான்றிதழை பெற்ற வகுப்பு ஆசிரியரின் செயலால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் குடும்பம்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: '' நான் ராமேஸ்வரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது, பள்ளியில் வகுப்பு ஆசிரியராக இருந்த ஆசிரியர் தன்னை ஒரு ஹீரோ போன்று மாணவிகளிடம் காட்டிக் கொண்டு, அவ்வப்போது சில சில்மிஷங்களை செய்தார்.
மேலும், தன்னை நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்னை அழைத்து சென்றார். அப்போது, எனக்கு தெரியாமல் அவர் சென்னையில் உள்ள அம்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஏற்கனவே எங்களுக்கு திருமணம் நடந்ததாக கூறி சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமண பதிவு செய்யப்பட்டு சான்று பெற்றுள்ளார்.
இந்த திருமண பதிவையும், புகைப்படங்களையும் காட்டி தன்னை ஆசிரியர் மிரட்டி வந்தார். இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியவுடன் ஆசிரியர் மீது ராமநாதபுரம் அணைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு, அவரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
இதையும் படிங்க: யார் அந்த சார்..? மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் இருப்பது என்ன?
இந்நிலையில், திருமணமே நடக்காத போது, ஆசிரியருக்கும் எனக்கும் திருமணம் நடந்ததாக போலி ஆவணங்கள் தயார் செய்து அம்பத்தூர் பதிவு அலுவலகத்தில் ஒரு சிலர் துணையுடன் திருமணப்பதிவு நடந்துள்ளது. இதனால் தனது எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, போலியான அந்த திருமண பதிவு சான்றை ரத்து செய்ய வேண்டும்'' என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சௌந்தர் முன்பூ விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது ஆசிரியர் நேரில் ஆஜரனார். நேரில் ஆஜரான ஆசிரியர், மாணவி பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு வர இல்லை என்பதையும், தங்களுக்கு திருமணம் நடக்கவில்லை என்பதனையும் கூறினார்.
அதனை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, மாணவியுடன் திருமணம் நடக்காத போது அதனை பதிவு செய்துள்ளது தவறு. மேலும், ஆசிரியர் தங்களுக்கு திருமணம் நடக்கவில்லை என்பதை நீதிமன்றத்தில் ஒத்துக் கொண்டார். மேலும், இந்த திருமண பதிவு சான்றை ரத்து செய்வதற்கும் எதிர்ப்பு தெரிவிக்காததால் திருமண பதிவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்தி வைத்தார்.