சென்னை: சென்னையில் இருந்து பெங்களூரு புறப்பட்ட விமானம் நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டு மீண்டும் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்றது. இதனால் இன்று காலை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று (டிச.26) காலை 8.40 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து 107 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 113 பேருடன் புறப்பட்டு சென்றது.
அப்போது வானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து விமானம் தொடர்ந்து பறப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்த விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விமானத்தை உடனடியாக சென்னைக்கு திருப்பிக் கொண்டு வந்து அவசரமாக தரையிறக்கும்படி அறிவுறுத்தினர். மேலும், சென்னை விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக செய்யப்பட்டன.
இதையும் படிங்க: நமக்கு கல்யாணம் ஆயிடுச்சி.. பள்ளி மாணவியை பதற வைத்த வகுப்பு ஆசிரியர்! நீதிபதி அதிரடி உத்தரவு..
அதன் பின்பு அந்த விமானம் இன்று காலை 9.05 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு சென்னை விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், விமானத்தை பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விமானம் பழுது பார்க்கப்பட்டு அதே விமானமோ அல்லது மாற்று விமானம் மூலமாகவோ பயணிகள் பெங்களூர் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.
விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக் கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த நடவடிக்கை காரணமாக விமானம் ஆபத்திலிருந்து தப்பியதோடு விமானத்திலிருந்த 113 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.