சென்னையில் மொத்தம் 525 பூங்காக்கள், 128 போக்குவரத்து தீவுகள், 118 சென்டர் மீடியன்கள், மாநகராட்சியின் காட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இதில் தத்தெடுப்பு மற்றும் ஒப்பந்த முறையில் சென்னையில் பராமரிக்கப்பட்டு வரும் பூங்காக்கள், சென்டர் மீடியன்கள் ,போக்குவரத்து தீவுகள், சாலையோர பூங்காக்களின் தரத்தை மேம்படுத்தவும், பொது மக்களின் பயன்பாட்டில் அவை இருப்பதை உறுதி செய்யவும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
மேலும் அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் மற்றும் இணை ஆணையர்களுக்கும், பூங்காக்களின் பராமரிப்பை ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சி கடிதம் அனுப்பியுள்ளது. மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ள தரநிலைகளின்படி பூங்காக்கள் பராமரிக்கப்படாமல் இருந்தால் ஒப்பந்தத்தை ரத்து செய்து, சென்னை மாநகராட்சியே பூங்காக்களை கையகப்படுத்தவும் அல்லது விதிகளுக்கு உட்பட்ட முன்வரும் மற்றவர்களுக்கு ஒப்பந்தங்கள் மாற்றி கொடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தத்தெடுப்பு மற்றும் ஒப்பந்த முறையில் பராமரிக்கப்பட்டு வரும் பூங்காக்கள், சென்டர் மீடியன்கள், சாலையோர பூங்காக்கள் முறையாக பராமரிக்கப்படாமலும், பொது மக்களின் பயன்பாட்டில் அவை இல்லாத வகையில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சென்னை மாநகராட்சி இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.