சென்னை: மாநிலம் முழுவதும் நாளுக்கு நாள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் அண்ணா நகர், அடையார் உள்ளிட்ட சில மண்டலங்களில் அதிகளவு பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றைக் குறைக்க அந்தந்த மண்டலங்களில் அதிக மருத்துவ முகாம்களும், கரோனா விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே கரோனா அதிகரித்த சமயத்தில் 12 ஆயிரம் தற்காலிகப் பணியாளர்களைக் கொண்டு வீடு வீடாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதில் கரோனா அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால், அருகில் உள்ள மருத்துவ முகாமுக்கு பாதிக்கப்பட்டவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இது போன்ற பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் குறைந்து வந்த நோய்த் தொற்று, தற்போது மீண்டும் அதிகரித்ததால் வீடு வீடாகச் சென்று கரோனா பரிசோதனை செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியில் 12 ஆயிரம் பணியாளர்களை மீண்டும் பணிக்கு எடுக்க உள்ளதாகவும், சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் இந்தப் பணி தொடங்கப்பட உள்ளதாகவும் மாநகராட்சி தரப்பு தெரிவித்துள்ளது. நேற்று (ஏப்.07) மட்டும் ஆயிரத்து 459 நபர்கள் இந்த கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.