சென்னை: ஈகை, ஒழுங்கு, கட்டுப்பாடு, ஏழைகளுக்கு உதவி செய்வதையும், சகோதரத்துவத்தை ஆகியவற்றை வலியுறுத்தும் விதமாக இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை வெகு சிறப்பாக நோன்பிருந்து கடைப்பிடிப்பார்கள். இதற்காக இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் 30 நாட்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை பகலில் நோன்பிருந்து இரவில் தாராவீஹ் என்ற சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார்கள்.
இதனிடையே, ஏப்ரல் 3ஆம் தேதி முதல் ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு கடைபிடிக்க தொடங்கியுள்ளனர். சென்னையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் ஏறத்தாழ 25-க்கும் மேற்பட்ட உருது பள்ளிகள் இயங்கி வருகிறது.
ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் உருது பள்ளிகளில் 5 பாடவேளைகள் மட்டும் பாடம் நடத்த வேண்டும் என அனைத்து துணை ஆணையர்கள், கல்வி அலுவலர்கள், உருது பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோருக்கு மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அந்த சுற்றறிக்கையில், 'பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து சென்னை உருதுப் பள்ளித் தலைமையாசிரியர்கள், ஏப். 3 தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்கியதால் அனைத்து சென்னை உருது பள்ளிகளும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை, 5 பாட வேளை இயங்க அனுமதி கேட்டு கடிதம் எழுதியிருந்தனர்.
இதனையடுத்து, இந்த கடிதத்தின் அடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து சென்னை உருது பள்ளிகளும் ஏப். 3ஆம் தேதி முதல் ஏப். 30ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை 5 பாட வேளை இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது' எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: நோயாளிக்கு ரத்தம் கொடுக்க நோன்பை பாதியில் கைவிட்ட வாலிபர்