சென்னை: தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணர்வு அளிக்கும் நிகழ்ச்சியை அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, ஒரு வாரத்திற்கு தமிழ்நாடு முழுவதும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
விழிப்புணர்வு
அதன்படி சென்னை பிராட்வே பணிமனையில், கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் சென்னை மாநகராட்சி துணை ஆணையர் மணீஷ் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தேவையான விளக்கங்களை அளித்தார்.
விதிமுறைகளை பின்பற்றுக
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மணீஷ், "முதலமைச்சர் உத்தரவு படி, சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களிலும் தினந்தோறும் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவது, தகுந்த இடைவெளியை பின்பற்றுவது, தொடர்ந்து தங்கள் கைகளை கழுவுவது உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே மூன்றாம் அலையில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
புதிதாக மூன்று காப்பகங்கள்
சென்னையில் வீடற்றவர்கள் என 24 பேர் மாநகராட்சி சார்பில் மீட்கப்பட்டு, அவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் அனைவருக்கும் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது.
அவர்கள் அனைவரும் மாநகராட்சி காப்பகத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுனர். மேலும் மூன்று காப்பகங்கள் புதிதாக உருவாக்கப்பட உள்ளன.
அதிகரிக்கும் டெங்கு
அதேபோல் சென்னையில் கடந்த 15 நாள்களில் டெங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. அவ்வப்போது மழை பெய்து வரும் காரணத்தினால் இதுபோன்று உயர்ந்துள்ளது.
ஒரு பகுதியில் ஒருவருக்கு டெங்கு நோய் வந்தால், அங்கு 500 மீட்டர் தூரத்திற்கு அனைத்து இடங்களிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தெரு நாய்களுக்கு விஷ ஊசி... கொத்து கொத்தாக கிடைத்த 300 சடலங்கள்!