கரோனா, டெங்கு போன்ற வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கலந்து கொண்டு அலுவலர்களுடன் வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அலுவலர்களுக்கு உத்தரவிட்டதாவது:
• நோய்த் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் களப் பணியாளர்கள் தீவிரமாக நோய் கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். மண்டல சுகாதார அலுவலர்கள், மண்டல மருத்துவ அலுவலர்கள் கண்காணித்து ஆய்வு அறிக்கையை வட்டார துணை ஆணையர் மூலமாக இணை ஆணையருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
• மூச்சுத்திணறல் உள்ளவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கவும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் எத்தனை பேர், வீட்டில் கண்காணிப்பில் உள்ளவர்களின் விவரம் போன்றவற்றை சுகாதார ஆய்வாளர்கள் அந்தந்த மண்டல அலுவலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
• நோய்த் தொற்று பணியில் ஈடுபட்டிருக்கும் களப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று உண்மையான விவரங்களை பதிவேற்றம் செய்கிறார்களா அல்லது தவறான தகவலை பதிவேட்டில் எழுதுகிறார்களா என்பதை மண்டல சுகாதார ஆய்வாளர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
• களப் பணியாளர்கள் அடிக்கடி விடுப்பில் இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் விவரங்களை சரியான முறையில் கொடுக்கப்படாத களப் பணியாளர்கள் கண்டறிந்து சம்பளம் பிடித்தல், உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கவும் மண்டல அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• ஐடி நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அவர்கள் செலவிலேயே ஆன்டிபாடி டெஸ்ட் எடுக்கப்பட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவுறுத்த வேண்டும். இது சம்பந்தப்பட்ட சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட வேண்டும். மண்டல நல அலுவலர்கள் மண்டல மருத்துவ அலுவலர்கள் குறித்து வட்டார துணை ஆணையர்களுக்கு சமர்ப்பித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
• களப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று வைரஸ் நோய்த் தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் பொழுது வீடுகளில் இருக்கும் மக்களிடம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும்படியும் இனி வரும் மாதங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் கொசு உற்பத்தி பெருகும். அதனால் மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற கொடிய நோய்கள் வராமல் தடுக்க வீட்டில் மொட்டை மாடியில் கழிவு பொருள்களை சேகரித்து வைக்காமலும் வீட்டில் உள்ள குளிர் சாதனப்பெட்டி தண்ணீர் தொட்டி முதலிய இடத்தை அடிக்கடி சுத்தம் செய்து பராமரிக்கவும் மண்டல பூச்சியியல் வல்லுநர் களப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தி மக்களிடையே பரப்ப வேண்டும். மேலும் பூச்சியியல் அலுவலர்கள் ஆய்வு செய்து அறிக்கையை மண்டல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
• அரசு மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் பேருந்து நிலையங்கள் ரயில் நிலையங்கள் போன்ற முக்கியமான இடங்களை கண்டறிந்து கொசு உற்பத்தி பெருக்கத்தை தடுக்கும் வகையில் அவ்வப்போது கிருமி நாசினி தெளித்தும் புகைப்போக்கி உபயோகித்தும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
• காலி நிலங்கள் சுத்தம் செய்யப்படாமல் இருந்தால் இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என்று பலகையில் எழுதி வைக்க வேண்டும். மண்டல பூச்சியியல் வல்லுநர்கள் களப் பணியாளர்கள் ஒன்றிணைந்து கள ஆய்வு மேற்கொள்ளவும் ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள காலி நிலங்களை அந்தந்த இளநிலை உதவி பொறியாளர்கள் கண்டெடுக்கப்பட்டு மண்டல அலுவலர்களுக்கு சரியான விவரங்களை அளிக்க வேண்டும்.
• குடிசைப் பகுதிகளை கண்டறிந்து கொசு உற்பத்தி பெருக்கத்தை தடுக்கும் வகையில் அவ்வப்போது கிருமி நாசினி தெளித்து புகைபோக்கி பயன்படுத்தியும் டெங்கு, மலேரியா போன்ற கொடிய நோய்கள் வராமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தனியார் கல்லூரியில் 200 படுக்கை வசதிகளுடன் சிறப்பு மையம்: அமைச்சர் வீரமணி