சென்னை வளசரவாக்கத்தில் சிறுநீரக நோயாளிகளின் பயன்பாட்டிற்காக 12 படுக்கை வசதி கொண்ட சிறுநீரக சுத்திகரிப்பு மையத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று (ஜூன் 26) தொடக்கி வைத்தார்.
இது குறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாநகராட்சி சார்பில் ஏற்கனவே 26 ஆயிரத்து, 575 நபர்களுக்கான இலவச சிறுநீர்க மையம் நுங்கம்பாக்கத்திலும், ரோட்டரி மையத்தில் எட்டாயிரத்து 599 பேர் பயன்படுத்தக்கூடிய இலவச சிறுநீர்க மையமும் செயல்பட்டுவருகிறது.
இந்நிலையில் தற்போது, வளசரவாக்கம் நகர்புற சமுதாய நல மையத்தில் 12 படுக்கை வசதிகளுடன் இலவச சிறுநீரக சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதை பொதுமக்கள் (சிறுநீரக நோயாளிகள்) பயன்பாட்டிற்காக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று திறந்துவைத்தார்.
இந்த மையம் ரோட்டரி கிளப் மற்றும் தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து சென்னை மாநகராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் திருவொற்றியூர், ஈச்சம்பாக்கம், அம்பத்தூர் பகுதிகளிலும் இலவச சிறுநீரக சுத்திகரிப்பு மையங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.