சென்னை: சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.
பொதுமக்கள் வணிக வளாகங்கள், அங்காடிகள் உள்ளிட்ட பல்வேறு பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், அவ்வப்போது கைகளை சுத்தப்படுத்திக் கொள்ளுதல் போன்ற அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாநகராட்சி தொடர்ந்து வலியுறுத்துகிறது.
ரூ.3.79 கோடி அபராதம் வசூல்
மேலும் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்குள்ளேயே பங்கேற்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள், கல்யாண மண்டபங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் சுப நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை, மாநகராட்சிக்கு இணையதளத்தின் வாயிலாக தெரியப்படுத்த உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மண்டல அமலாக்கக் குழுக்களின் ஆய்வின்போது, மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஏப்ரல் 9 முதல் இதுநாள்வரை கரோனா வைரஸ் தொற்று தடுப்பு, பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 8 ஆயிரத்து 47 நிறுவனங்கள், 46 ஆயிரத்து 755 தனிநபர்களிடம் இருந்து, ரூ.3 கோடியே 79 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 925 கடைகள் மூடப்பட்டுள்ளன. அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதால் தொற்று பரவ வாய்ப்புள்ளது.
கட்டுப்பாடுகள் மேலும் தீவிரம்
அதனால் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயமாக கடைப்பிடிப்பதை கண்காணிக்கும் வகையில், வருவாய்த் துறை, மண்டல அமலாக்கக் குழுக்களின் மூலம் நாள்தோறும் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுநாள்வரை நாளொன்றுக்கு 300 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தி நாளொன்றுக்கு 800 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 1,851 பேருக்கு கரோனா