சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள் உள்ளன. இதில், மாநகராட்சி தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட தூய்மை பணியாளர்களை காட்டிலும், நிரந்தர பணியாளர்களின் எண்ணிக்கை குறைவு. சமீபத்தில் மண்டல வாரியாக நிரந்தர பணியாளர்கள் இடமாற்றப்பட்டு, ஒப்பந்த பணியாளர்களை மாநகராட்சி பணி நீக்கம் செய்தது.
இதனால் தூய்மைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நேற்று (பிப்.18) தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அப்போது அவரை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள், தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் ஒப்பந்த ஊழியர் ஒருவர் கூறியதாவது, "பல ஆண்டுகாலம் பணி புரிந்தோம். ஆனால், எந்தவித அறிவிப்புமின்று எங்களை பணி நீக்கம் செய்துள்ளனர். மீண்டும் பணி வழங்கிவிட்டதாக செய்தியாளர்களிடம் ஆணையர் கூறுகிறார். ஆனால் யாருக்கும் இன்னும் பணி வழங்கவில்லை. எங்களுக்கு உரிய பணி கிடைக்காவிட்டால் எங்கள் குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொள்வோம்" என வேதனை தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் வாழ்த்து