சென்னை: தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் தங்களது கடைகளில் இருக்குமானால் 10 நாள்களுக்குள் அதை அகற்ற வேண்டும் மாநகராட்சி ஆணையர் வியாபாரிகளுக்கு அறிவுறுத்திள்ளார்.
தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்துள்ள நிலையில் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட வணிகர் சங்க பிரதிநிதிகள் மற்றும் வியாபாரிகளுடன் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ககன்தீப் சிங் பேட்டி
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா மற்றும் இதர வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:-
ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பயன்படுத்த கூடாது. இது குறித்தும், அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருள்கள் குறித்தும் இந்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
ரூ.3 லட்சம் அபராதம்
பிளாஸ்டிக் கப், பாலீத்தின் பைகள் உள்ளிட்ட 14 வகையான ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்திய கடைகள் மீது இதுவரை 3 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளன.
பிளாஸ்டிக் தடை மீது கரோனா காரணமாக கவனம் செலுத்தாமல் இருந்தது. தற்போது இதில் கவனம் செலுத்தி துரிதமாக செயல்பட உள்ளோம்.
வியாபாரிகள் கோரிக்கை ஏற்பு
குறிப்பாக ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு வணிக சங்க பிரதிநிதிகள் இரண்டு வாரங்கள் கால அவகாசம் கேட்டுள்ளனர். அதற்கு மாநகராட்சி சார்பில் 10 நாள்கள் வரை இந்த ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை அகற்ற கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பெருங்குடி போன்ற குப்பை கிடங்கில் இருக்கக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களை சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்புகிறோம் அவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். இயற்கையை பாதிக்காமல் பிளாஸ்டிக் பொருள்களை அகற்ற முயற்சி செய்து வருகிறோம்.
சென்னையில் தடுப்பூசிக்கு ஒரு லட்சம் பேர் தயார்
இதுவரை சென்னையில் 38 லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது, சென்னை மாநகரில் தினமும் 1 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்த தயாராக இருக்கின்றனர்.
கரோனா காலம் என்பதால் கடந்த காலங்களில் வரி பாக்கியை செலுத்த பொதுமக்களை வற்புறத்தவில்லை, தற்போது பொதுமக்கள் தாமாக முன்வந்து சொத்து மற்றும் தொழில் வரிகளை செலுத்த வேண்டும்.
இவ்வாறு ககன்தீப் சிங் பேடி கூறினார்.
இதையும் படிங்க : தூத்துக்குடி பிளாஸ்டிக் ஏற்றுமதி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து!