சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. அண்ணா நகர், கோடம்பாக்கம் போன்ற சில மண்டலங்களில் மட்டும் தொற்றுப்பரவல் சற்று அதிகரித்துக் காணப்படுகிறது. அண்ணா நகரில் கரோனாவிற்குச் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 5ஆயிரத்தைக் கடந்துள்ளது. தொற்று பாதிப்பைக் குறைக்க அந்தந்த மண்டலங்களில் கூடுதல் மருத்துவ முகாம்களும், விழிப்புணர்வு நிகழ்வுகளும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகின்றன.
மாநகராட்சியில் தினமும் சராசரியாக 30,000 நபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று( மே26) மட்டும் சென்னையில் 29,460 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, அதில் 3561 நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சென்னையில் கரோனா பரவல் விகிதம் 12.1% ஆக குறைந்துள்ளது.
100 நபர்களுக்குக் கரோனா பரிசோதனைசெய்து, அதில் கரோனா உறுதிசெய்யப்படுவோர் எண்ணிக்கையை கரோனா பரவல் விகிதம் என்று அழைப்பர். அதன்படி சென்னையில் மே 10ஆம் தேதி 26.6% ஆக இருந்தது, இப்போது படிப்படியாகக் குறைந்து தற்போது 12.1% ஆக குறைந்துள்ளது.
மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 91 ஆயிரத்து 197 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4 லட்சத்து 38 ஆயிரத்து 815 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 45 ஆயிரத்து 738 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். 6,644 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
நேற்று மட்டும் 28,923 நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 19 லட்சத்து 12 ஆயிரத்து 987 நபர்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'அரசின் செயல்பாடுகள் திருப்தியளிக்கிறது!'- உயர் நீதிமன்றம் பாராட்டு