சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தலைமையில், பல்லாவரம் ரேடியல் சாலையிலுள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 'காவலன்' எஸ்.ஓ.எஸ். செல்போன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது மாணவிகளிடம் உரையாற்றிய விஸ்வநாதன், “பெண்களின் பாதுகாப்பிற்காக, காவலன் எஸ்.ஓ.எஸ். செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள பெரியநகரங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறைவாக நடந்துள்ள நகரம் சென்னைதான்.
இங்குள்ள மக்கள் சட்டத்தைப் பின்பற்றி நடப்பதும் இதற்கு ஒரு காரணம். அதேநேரத்தில், நடக்கும் சில குற்றங்களும் இனி இருக்கக்கூடாது என்பதற்காகதான் இந்தச் செயலி கொண்டுவரப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பிற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமானது சிசிடிவி கேமரா. உலகத்திலேயே பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அதிகமான சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ள நகரம் சென்னைதான்.
இதனால் குற்றங்கள் மட்டுமின்றி பொது அமைதியை சீர்குலைக்கும் பிரச்னைகளும் குறைந்துள்ளன. குற்றவாளிகளை கைது செய்வதற்கு முன்னரே நகைகளைப் பறிமுதல் செய்யும் சூழலும் இதனால் ஏற்பட்டுள்ளது.
காவலன் செயலியை பயன்படுத்தக்கூடிய சூழல் உங்களுக்கு ஏற்படக்கூடாது. அப்படி வந்தால் உங்களுக்கு உதவிசெய்ய காவல் துறை உள்ளது. இதேபோல் ஓர் இடத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உணரும் மக்களுக்காக விரைவில் இ-மெயில் முகவரி, வாட்ஸ்அப் எண் ஆகியவை அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
வெளியில் நடக்கும் குற்றங்களைத் தடுப்பதற்காகப் பல்வேறு நடவடிக்கைளை எடுத்துவருகிறோம். இருப்பினும், ஆன்லைன் மூலம் நடக்கும் குற்றங்கள்தான் மிகவும் ஆபத்தானது. இந்த விசயத்தில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் நண்பர்களைத் தேர்வு செய்யும்போது அவர் எப்படி என்பதை தெரிந்துகொண்டு தேர்வு செய்யுங்கள். விஞ்ஞான வளர்ச்சியைத் தடுக்க முடியாது. அதனால் பொறுப்பாக, பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: 'பாலின பாகுபாடு குடும்பத்திலிருந்தே தொடங்குகிறது' - நீதிபதி விமலா