சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ் நோவர் (58). இவருக்கு அருளப்பன் என்கிற அண்ணன், மனோன்மணி என்ற அக்காவும் இருக்கின்றனர். இவர்களது பெற்றோருக்கு சொந்தமாக 497 சதுர அடி கொண்ட வீடு இருந்துள்ளது. இந்த வீட்டை பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக ஐஸ் நோவர் 2018ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில், மூன்று பாகமாக இடத்தை பிரித்து எடுக்குமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் ஐஸ் நோவருக்கு சேர வேண்டிய வீட்டை அவரது அண்ணன் மகன்கள் விஸ்வநாதன், சுந்தர், கலைச்செல்வன், வெங்கடேசன் ஆகியோர் இணைந்து இடித்துள்ளனர். இதனை தட்டி கேட்க சென்ற அவரை அவதூறான வார்த்தைகளால் பேசி உள்ளனர். இது தொடர்பாக ஓட்டேரி காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இதுவரை அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததால் பிப்ரவரி 4ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஐஸ் நோவர் புகார் அளித்துள்ளார். இதற்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஐஸ் நோவர் இன்று ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வந்து காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றுள்ளார்.
உடனே அங்கு பணிபுரியும் காவலர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றியுள்ளனர். பின்னர் ஐஸ் நோவரை வேப்பேரி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தடை செய்யப்பட்ட வலைகளை பறிமுதல் செய்ய எதிர்ப்பு - தீக்குளிக்க முயன்ற மீனவப் பெண்கள்!