தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக சென்னையில் கரோனா தொற்றின் தாக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளது. அதனால், கரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகிறது.
மேலும், சென்னை முழுவதும் கரோனா தொற்று பரவாமல் தடுக்க கிருமி நாசினி, தகுந்த இடைவெளியை பின்பற்றுவது தொடர்பான ஆலோசனைகளை மாநகராட்சி, காவல் துறையினர் செய்துவருகின்றனர். மேலும், கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை கல்லூரிகள், விடுதிகள், மருத்துவமனைகள், கல்யாண மண்டபம் போன்ற பல்வேறு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக லயோலா கல்லூரியில் கரோனாவினால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த பொதுமக்கள் பலரை இன்று சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் பங்கேற்று அவர்களுக்கு அறிவுரை வழங்கி, வீட்டிற்கு வழி அனுப்பிவைத்தார். இவருடன் இணை ஆணையர் சுதாகர், திருவல்லிக்கேணி துணை ஆணையர் தர்மராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் சென்னையில் நாளுக்கு நாள் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால், அவர்களை தங்க வைக்க இடமில்லாததால் பலர் விடுதிகள், திருமண மண்டபங்களில் தங்க வைத்துக்கொள்ள அனுமதியளித்து வருகின்றனர். குறிப்பாக கோட்டூர்புரம் ஐஐடியில் உள்ள மகாநதி விடுதியில் கரோனாவினால் பாதிக்கப்பட்ட நபர்களை தங்க வைத்து சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து, காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் விடுதிக்கு நேரில் சென்று தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைப்பதற்கு போதுமான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா, பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளதா எனக் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: சிறப்பு விமானம் மூலம் துபாயிலிருந்து சென்னை வந்த 359 பேர்!