சென்னை: கொடுங்கையூர், மாதவரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன்படி, போலீசார் அந்தப் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டபோது, சந்தேகப்படும்படியான 5 பேர் பிடிபட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து, அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகளை வரவழைத்து விற்றதாக சிரஞ்சீவி, அஜய், ராக்கி, கல்லூரி மாணவர்கள் இருவர் என்பது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 500 போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.
பல்பொருள் அங்காடியில் தீ விபத்து: தாம்பரம் அடுத்த சேலையூர் இந்திரா நகர் அகரம்தென் பிரதான சாலையில், பி.ஜெயராஜ் (46) என்பவருக்குச் சொந்தமான மூன்றடுக்கு மாடி (சூப்பர் மார்க்கெட்) பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பல்பொருள் அங்காடியின் இரண்டாவது தளத்தில், நள்ளிரவு திடீரென தீப் பற்றி எரிந்துள்ளது. அப்போது, அதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்தோர், தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் அளித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, தகவலின் பேரில் வந்த 20 தீயணைப்பு வீரர்கள், இரண்டு மணி நேரமாகப் போராடி தீயை அணைத்துள்ளனர். பின்னர், தீ விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மின்கசிவு காரணமாக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்திருக்கக் கூடும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஹெலிகாப்டர் மூலம் 2 சடலங்கள் மீட்பு: தியாகராய நகரைச் சேர்ந்த சிவதான் (46) என்பவர், ஈவன்ட் மேனேஜ்மென்ட் வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது அலுவலகத்தில் 20 பேர் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த நிலையில், புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், சிவதான் மற்றும் ஊழியர்கள் அனைவரும் நேற்று (டிச.29) கானாத்தூரில் உள்ள ஒரு ரிசார்ட்டிற்குச் சென்றுள்ளனர்.
அங்கு அவர்களில் ஏழு பேர் மட்டும், கானாத்தூரில் தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள கடலில் குளிக்கச் சென்றுள்ளனர். அந்த நேரத்தில், அங்கு குளித்துக்கொண்டு இருந்தவர்களை பெரிய அலை ஒன்று இழுத்து சென்றதாகக் கூறப்படுகிறது. இதில், இருவர் தப்பி கரையேறிய நிலையில், சிவதான் (46), நவீன் (26), மானஸ் (18), பிரசாந்த் (18), நிவேதிதா (18) ஆகிய ஐந்து பேரும் சிக்கியுள்ளனர்.
இதையடுத்து, கானாத்தூர் பகுதி மீனவர்கள் உதவியுடன் கடலில் மாயமான ஐந்து பேரையும் தேடிய நிலையில் சிவதான், நவீன் ஆகிய இருவரின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நிவேதிதா உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். தற்போது அவரை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.
இதைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து கானாத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கடலில் மூழ்கி மாயமான பிரசாந்த் மற்றும் மானஸ் ஆகியோரை தேடி வந்த நிலையில், இன்று (டிச.30) இருவரை கடலோர காவல் படையினர் எம்.ஜி.எம் பின்புறம் உள்ள கடலில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சடலமாக மீட்டுள்ளனர்.
நாட்டு வெடிகளைப் பதுக்கி விற்பனை செய்தவர் கைது: சென்னையில் சில வியாபாரிகள் சட்ட விரோதமாக பட்டாசுகளைப் (நாட்டு வெடிகள்) பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த சோதனையில் நெசப்பாக்கம், கண்ணதாசன் 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில், உரிய அனுமதியின்றி பட்டாசுகளைப் பதுக்கி வைத்து ரகசியமாக விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. பின்னர் இது தொடர்பாக செல்வகுமார் (38) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 320 பேப்பர் ரோல் பட்டாசுகள் (பெரியது), 104 பேப்பர் ரோல் பட்டாசுகள் (சிறியது), ஆயிரத்து 854 சணல் பட்டாசுகள் (சிறியது) உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கணவன் மீது புகாரளிக்க வந்த பெண்...சாதியின் பெயரைச் சொல்லித் தாக்கிய பெண் எஸ்.ஐ?